.

Loading...

திங்கள், 14 ஏப்ரல், 2014

குமரியை தொட்ட ரயிலுக்கு வயது 35!


எல்லா விசயத்திலும் முன்னோடியான கன்னியாகுமரி மாவட்டம் ரெயில் விசயத்தில் மட்டும் பின்னோடியாகிப்போனது. தமிழகத்தின் பல பகுதிகளும் ரெயில் வசதியை பெற்றிருந்தாலும் குமரி மாவட்டம் என்னவோ இந்த வசதியை 1979-ஆம் ஆண்டு வரை இழந்தே இருந்தது. இந்த குறையை நிவர்த்தி செய்யும் விதமாக, இந்தியாவின் இரு முனைகளான காஷ்மீர் மற்றும் கன்னியாகுமரியை இணைக்கும் ரெயில் திட்டத்திற்கு மறைந்த முன்னாள் பிரதமர் இந்திர காந்தி அவர்கள், 06/09/1972-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்கள்.
இதில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களும், கேரளா முன்னாள் முதல்வர் அச்சுத மேனோனும் கலந்து கொண்டனர். சுமார் ஆறு வருடங்களுக்கு பின்னர் இந்த பணிகள் முழுமை அடைந்தன. இதன் பின்னர் அன்றைய பிரதமர் மொரார்ஜி தேசாய் அவர்களால் 15/04/1979-ஆம் ஆண்டு துவக்கி வைக்கப்பட்டது.
அப்போது ரயில்வே அமைச்சராக இருந்த மது தண்டவதே அவர்கள் முதல் ரயிலை கன்னியாகுமரியிலிருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இன்று 35 வருடங்கள் ஆனாலும் கோட்டத்தோடு இணைத்த விசயத்தில் கோட்டை விட்டுவிட்டோம் என்பதே உண்மை! தகவல் மற்றும் மேலதிக தொடர்புகளுக்கு: P.Edward Jeni Secretary Kanyakumari District Railway Users' Association (KDRUA) IInd Floor, 4 Gandhi Street, Kottar, Nagercoil -629002, Kanyakumari District G.S.M : +91 9443002949 Visit our Facebook : www.facebook.com/Kanniyakumari

வெளிநாட்டில் வேலை பார்க்கும் இந்தியர்கள் சார்பாக சில கோரிக்கைகள்...


வெளிநாட்டில் (வாழும் அல்ல) வேலை பார்க்கும் இந்தியர்கள் சார்பாக சில கோரிக்கைகள்... நடைபெறயிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலையொட்டி தாங்களெல்லாம் பரப்புரையில் மிகவும் பரபரப்பாக இருக்கின்ற இந்த நேரத்தில் எல்லோரும் ஒட்டுமொத்தமாக மறந்த வெளிநாட்டில் (வாழும் அல்ல) வேலை பார்க்கும் இந்தியர்கள் சார்பாக சில கோரிக்கைகள்... வெளிநாட்டு இந்தியர்கள் என்போர் இருவகைபடுவர். ஒருவர் குடும்பம் குட்டிகளோடு வெளிநாட்டிலேயே நிரந்தரமாக தங்கி, ஒரு தலைமுறைக்குப்பின் இந்திய வம்சாவழியினர் என்ற அழைக்கப்படுபவர்கள். இன்னொரு வகையினரோ சுவற்றில் அடிக்கப்பட்ட பந்தாய் எந்நேரமும் இந்தியாவுக்குள் திரும்பி வருவோர், சுருக்கமாக சொல்வதென்றால் வளைகுடாவாசியினர். மிகச்சிலரைத் தவிர வளைகுடா வாழ்க்கையை யாரும் விரும்பி ஏற்கவில்லை அதிலும் சிறுபான்மையினர் அரசியல் அதிகாரமின்மை, மேற்படிப்பறிவு மறுத்தல், படித்தாலும் அரசு வேலை மறுத்தல், வெகுசிலருக்கு விட்டில்பூச்சி மோகம் என வலிய இந்த வாழ்க்கைக்குள் தள்ளப்பட்டவர்கள். இங்கு இந்தியாவில் உள்ளவர்கள் நினைப்பது போன்று வீடு வாங்கவோ, நிலம் வாங்கவோ, நிரந்தர குடியுரிமையோ கிடைக்காது. இரண்டு வருடத்துக்கு ஒருமுறை அடிமைபத்திரம் (Contract) புதுப்பித்து கொண்டே இருக்கும். இங்கு உள்ள அரசு அல்லது வேலைபார்க்கும் நிறுவனம், அல்லது அரபி எப்போது இந்தியாவுக்கு போ (Exit) என்று சொல்லுவார்கள் என்று தெரியாது. ஏப்போது சொன்னாலும் அதேநாள் செல்ல தயாராக இருக்க வேண்டும். இந்த காரணத்தால் தங்கும் அறைகளில் கூட ஆடம்பர பொருட்கள் யாருமே வாங்கி உபயோகப்படுத்துவது கிடையாது. ஏ.கா சொல்ல வேண்டுமானால் 42 இஞ்ச் வண்ண தொலைகாட்சி பெட்டி வாங்கினால் கஷ்டப்பட்டு வாங்குபவர் அதை ஒரு வாரத்துக்கு மேல் பயன்படுத்த முடியாது. பயன்படுத்தவும் மாட்டார். எங்களில் மிகச்சாதாரண தொழிலாளியும் உண்டு, அரிய வாய்ப்பால் அறிவையும் உழைப்பையும் வெளிநாட்டினருக்காக வழங்கிக் கொண்டிருக்கும் உயர்நிலையோரும் உண்டு, அதாவது இந்தியா பயன்படுத்த தவறிய செல்வங்கள் நாங்கள். மேலும் நாங்கள் சம்பளத்திற்கு மேல் இந்திய அரசு ஊழியர்கள் போல கிம்பளத்தை கனவிலும் காண முடியாதவர்கள். எந்த நேரமும் சவூதியின் 'நிதாகத்' போன்ற சட்டங்களால் பாதிக்கப்பட இருப்பவர்கள், இவையல்லாமல் ஈராக் குவைத்தை ஆக்கிரத்தபோது உலகம் கண்டதே ஓர் காட்சி! பாலைவெளிகளில் உயிரை பிடித்துக் கொண்டு ஒடிவந்தோமே அதைபோன்ற நிலையை இன்னொரு முறை சந்திக்க மாட்டோம் என்பதற்கு எத்தகைய உத்தரவாதமும் இல்லாதவர்கள், இவற்றிற்கெல்லாம் மேல் எத்தனை கோடியை நீங்கள் கொட்டிக் கொடுத்தாலும் ஈடாகாத, வெளிநாட்டில் தனிமையில் தொலைந்த எங்களின் இளமை. அதேவேளை எங்களுக்கு வாழ்க்கைபட்டதற்கு தண்டனையாய் எங்கள் மனைவிமார்களோ கணவனிருந்தும் விதவைகள் போல் வாழும் ஒர் அவல வாழ்க்கை, போனில் மட்டுமே பொங்கும் அப்பன் பிள்ளை பாசம். இத்தனை தியாகத்திற்கு இடையே தவறாமல் நாங்கள் எங்கள் தேசத்திற்கு ஈட்டித் தரும் அந்நிய செலாவணி எனும் பெரும் பொருளாதாரம் ஆனால் கைமாறாக??? 1. விமான நிலையங்களில் வந்திறங்கினால் கஸ்டம்ஸ் அதிகாரிகளுக்கு நாங்கள் திருடர்களாய் மட்டுமே தெரிகிறோம், நாய்கள் கடித்துக் குதறுவதுபோல் எங்கள் பொருட்களை சின்னாபின்னப்படுத்துகிறார்கள். வீட்டுத்தேவைக்கு கொண்டு வரும் பொருட்களுக்குத் தான் எத்தனை சோதனைகள்?, கட்டுப்பாடுகள்? இதை தடுத்து நிறுத்தப்போவது யார்? 2. திருவனந்தபுரத்திற்கு வரும் தமிழக விமான பயணிகளை குதறும் கஸ்டம்ஸ், மலையாளிகளை மட்டும் மனிதர்களாய் மதிக்கின்றது. இந்த இன மானங்கெட்ட வாழ்கை மற்றும் மாச்சரியங்களை களைந்து அனைவரையும் இந்தியர்களாக நடத்த உழைக்கப்போவது யார்? 3. அனைத்து அரபு நாடுகளிலிருந்தும் மதுரை, திருச்சி, கோவை, போன்ற விமான நிலையங்களுக்கு நேரடியாக முதலில் வாரத்துக்கு மூன்று நாள் வீதம் விமானம் இயக்கி மக்களின் வரவேற்பை பொறுத்து தினசரியாக இயக்க வேண்டும். 4. துபையிலிருந்து திருச்சிக்கு இயக்கப்பட்ட ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானங்களும் தற்போது ஒவ்வொன்றாய் மாயமாக தொடங்கியுள்ளது. இவை முழுமையாய் மறைந்து தனியார் விமானங்களும் அண்டை நாட்டு விமானங்களும் அதிக பயண கட்டணத்துடன் எங்களை அச்சுறுத்துமுன் தடுத்து நிறுத்தப்போவது யார்? 5. திருச்சியிலிருந்து சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளுக்கு பட்ஜெட் கட்டண தனியார் மற்றும் அரசு விமான சேவைகள் அதிகரித்து வரும் நிலையில், வளைகுடா நாடுகளிலிருந்தும் திருச்சி, கோவை மற்றும் மதுரை விமான நிலையங்களை இணைத்து நேரடி பட்ஜெட் மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவைகளை துவங்கலாமே, இத்திட்டத்திற்கு மணி கட்டப்போவது யாரோ? 6. சொந்த பந்தங்களை காண வருடத்திற்கு ஒரு மாதமோ அல்லது இரு வருடத்திற்கு இரு மாதமோ விடுமுறையை பிச்சையாய் பெற்று வரும் நாங்கள் முன்பெல்லாம் அனைத்து நிறுவன விமானத்திலும் 40 கிலோ பயண பொதியை (Cabin Baggage) கொண்டு வர அனுமதிக்கப் பெற்றிருந்தோம். அதிக பொதிக்கு ஆசைப்பட்டே உருப்படாத நிர்வாகம், குறித்த நேர புறப்பாடு உத்திரவாதமில்லாத சர்வீஸ் என தெரிந்தும் ஏர் இந்தியா (எக்ஸ்பிரஸ் அல்ல) விமானத்தில் சென்னைக்கும், இதர நகரங்களுக்கும் பயணித்தோம் இப்போது அதிலும் கை வைத்து 10 கிலோவை குறைத்து விட்டார்கள், 40 கிலோ பொதியை (Cabin Baggage)மீண்டும் அனுமதித்தால் நாங்களும் பயன்பெறுவோம் அதன் மூலம் தொடர் நஷ்டத்தில் இயங்கிவரும் ஏர் இந்தியாவுக்கும் வருமானம் தானே? இந்த உண்மையை விமானத்துறையிடம் எங்களுக்காக யார் எடுத்துச் சொல்ல போகிறீர்கள்? 7. வளைகுடா இந்திய தொழிலாளிக்கும் எத்தனையோ பிரச்சனைகள் தான் பணிபுரியும் கம்பெனியுடன் ஏற்படத்தான் செய்கின்றன ஆனால் அண்டை நாடான இலங்கை தூதரகத்திற்கும், தன் பிரஜைகளின் உரிமைகளுக்காக எந்நேரமும் வரிந்து கட்டும் பிலிப்பைன்ஸ் தூதரகத்திற்கும் இருக்கும் அக்கரையில் நம் தூதரகத்தின் அக்கறை எத்தனை சதவிகிதம் என சொல்ல முடியுமா? மலையாளிகளின் வெளியுறவுத் துறை இந்திய அரசின் வெளியுறவு துறையாக மாற பாடுபட போவது யார்? தமிழக பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கேரளாவில் உள்ள M.P, M.L.Aக்கள் ஒன்னுக்கு போறதை குடிக்க வேண்டும். 8. வளைகுடா தொழிலாளர்கள் சந்திக்கும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பிரச்சனைகளை கேட்டு, அவற்றிற்கேற்றவாறு உதவிட வளைகுடா நாடுகளின் விடுமுறை நாட்களான வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இந்திய தூதரகம் சார்பாக சிறப்பு முகாம்களை தொடாந்து வாரம் ஒரு முறையோ அல்லது இரு வாரத்திற்கு ஒரு முறையோ நடத்தினால் எங்களுடைய பல்வேறு பிரச்சனைகளுக்கு சுமூக தீர்வு கிட்டுமே, உள்நாட்டில் ஆண்களில்லா பல குடும்பங்கள் பல்வகை கிரிமினல்கள், ஆக்கிரமிப்பாளர்களின் தொந்தரவிலிருந்து தப்பிக்க, எங்களின் உணர்வுகளை புரிந்து உதவப்போவது யார்? 9. வளைகுடாவிலிருந்து நாங்கள் விரட்டி அடிக்கப்பட்டால் அல்லது நாங்களாகவே முடித்துக்கொண்டு வந்தாலோ நாங்கள் இந்தியதன்மையை புரிந்து காலூன்றவே பல வருடங்கள் ஓடிவிடும், எங்களுக்கு உதவிட வட்டியில்லா கடன், மானியம், வாரியம் போன்றவற்றை நிறுவிட சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் முயற்சிக்கலாமே? எங்களுக்கு உதவ யாருக்கு இந்த நல்ல மனம் இருக்கிறது, செயலில் காட்டுவீர்களா? 10. இது தனியார் டிவி சேனல்களுக்கு: ஷேர், ஸ்டாக் மார்க்கெட், ஆன்லைன் வர்த்தகம், கம்மாடிட்டி, வருமானவரி, இன்{ரன்ஸ் என நிபுணர்களை கொண்டு எத்தனையோ ஆலோசனைகளை வழங்கும் தனியார் சேனல்களே, இரவு நேரத்தில் எங்களின் வெளிநாட்டு உரிமைகள் பற்றியும், வெளியுறவு துறை பற்றியும், தூதரகத்தின் பணிகள் பற்றியும், கஸ்டம்ஸ், இமிக்கிரேஷன் போன்றவை பற்றியும் வெளிநாட்டில் உழைக்கும் இந்தியர்கள் பற்றி அவ்வப்போது வரும் சட்டங்கள் மற்றும் திருத்தங்கள் பற்றியும் தமிழில் ஆலோசணை வழங்க முன்வரலாமே, குறைந்தபட்சம் வாரம் அல்லது மாதம் ஒருமுறையாவது வருவீர்களா? 11. வெளிநாடுகளில் வசிக்கும் எங்களின் பிள்ளைகள் இந்தியாவில் கல்வி பயிலுவதற்கு என கேந்திர வித்தியாலையா போன்ற பள்ளிகூடம் தமிழகத்தில் உள்ள அனைத்து தாலுகாவில் ஓர் பள்ளிக்கூடம் வீதம் அமைக்க வேண்டும். 12. வெளிநாடுகளில் வசிக்கும் எங்களின் பிள்ளைகள் உயர்கல்வி பெறுவதங்கு வசதியாக தமிழக அரசின் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு அமுல்படுத்த வேண்டும். 13. தமிழக அரசின் வெளிநாட்டில் வேலைவாலைவாய்ப்பு நிறுவனத்தின் பிரிவு அலுவலகத்தை Overseas Manpower Corporation Ltd மதுரை, கோவை, திருச்சி, நெல்லை போன்ற நகரங்களில் அமைக்க வேண்டும். 14. தமிழகத்தில் உள்ள தூத்துகுடி, சேலம், வேலூர், போன்ற விமான நிலையங்களை விரிவுபடுத்தவும், புதிதாக கன்னியாகுமரியில் விமான நிலையம் அமைக்க வேண்டும். 15. நாங்கள் 50 டிகிரி வெயிலில் நின்று வேலை செய்து அனுப்பும் காசை எங்கள் குடும்பங்கள் குடும்ப செலவுக்காக வேண்டி வங்கியிலிருந்து எடுப்பதற்கு காலையில் சென்றால் மாலையில்தான் வீட்டுக்கு வரக்கூடிய நிலை உள்ளது. ஆகவே அதை நிவிர்த்தி செய்வதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து தாலுகாவிலும் ஓர் வெளிநாடுவாழ் இந்தியர்க்கு மட்டும் NRI Branch என தனி வங்கி பிரிவு அமைக்க வேண்டும். 16.தமிழக அரசு வெளிநாடுவாழ் இந்தியருக்கு என தனியாக ஓய்வுஊதிய திட்டம், தனி இயக்ககம், கேரளாவில் உள்ளது போல் தனி அமைச்சகம் அமைக்க வேண்டும். 17. தமிழகத்தில் உள்ள அனைத்து பத்திரிகைகளிலும் ஒரு பக்கத்துக்கு வளைகுடா செய்திகள் என்று வெளியிட்டு Bahrain, Kuwait, Oman, Qatar, Saudi Arabia, United Arab Emirates , Jordan, Morocco, Yemen போன்ற நாடுகளில் உள்ள முக்கிய செய்திகளை வெளியிடுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். இவ்வாறு வளைகுடா செய்திகள் வெளியிடுவதால் குடும்பத்தினர் வெளிநாடுகளில் நடப்பதை உடனடியாக தெரிந்து கொள்ள முடியும். 18. தமிழகத்தில் உள்ள அனைத்து தொலைகாட்சிகளில் தினசரி வளைகுடா நேரம் இரவு 9:00 மணிக்கு வளைகுடா செய்திகள் என்று என்று வெளியிட்டு Bahrain, Kuwait, Oman, Qatar, Saudi Arabia, United Arab Emirates , Jordan, Morocco, Yemen போன்ற நாடுகளில் உள்ள முக்கிய செய்திகளை வெளியிடுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். இவ்வாறு வளைகுடா செய்திகள் வெளியிடுவதால் குடும்பத்தினர் வெளிநாடுகளில் நடப்பதை உடனடியாக தெரிந்து கொள்ள முடியும். இந்த வசதி தற்போது கேரளாவில் உள்ள அனைத்து தொலைகாட்சிகளிலும் உள்ளது. 19. தற்போது உள்ள அனைத்து விமான நிலையங்களிலும், விமான சேவை நிறுவனங்களிலும் அனைத்து அறிவிப்புகளும் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே அறிவிக்கப்படுகிறது. தமிழகத்தில் படிப்பறிவில்லாத ஏழை இளைஞர்கள் ஆங்கிலம் புரியாமல் மிகவும் அவதிப்படுகின்றனர். தமிழில் இந்த வசதிகள் அனைத்து விமானநிலையங்கள் மற்றும் விமான சேவை நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். 20 வெளிநாடுகளில் குடும்பத்துடன் வசிக்கும் நபர்கள் தங்கள் பிள்ளைகள் தமிழ் மொழி படிப்பதற்கு அரபு நாடுகளில் உள்ள அனைத்து இந்தியன் பள்ளிகளில் (Indian Schoolகளில் ) தமிழ்மொழியை மொழி பாடமாக படிக்க தமிழக அரசு முயற்சி செய்து அதற்கான வசதி ஏற்படுத்த வேண்டும். இறுதியாக ஒன்றை கூறி நிறைவு செய்கின்றோம், நாங்கள் யாரும் தனி ஆட்கள் அல்ல மாறாக நாங்கள் சொன்னால் மதித்து கேட்கக்கூடிய, மதுவுக்கோ பணத்திற்கோ மயங்காத குடும்ப வாக்காளர்கள் என்ற ஜன சமுத்திரம் எங்கள் பின்னால் உள்ளதை புரிந்து கொண்டு வெளிநாட்டில் வேலை பார்க்கும் எங்களின் குறைகளையும் களைய முன் வருவீர்கள் என்ற நல்லெண்ணத்துடன் இப்போதைக்கு இத்துடன் நிறைவு செய்கின்றோம். வளைகுடாவில் பணியாற்றும் இந்தியர்கள் சார்பாக, Yours faithfully Kanyakumari District NRI Welfare Association, Post Box 1026 Post code 611 Nizwa, Sultanate of Oman

ஞாயிறு, 23 மார்ச், 2014

எழுத்து மற்றும் இலக்கண பிழைகளை உணர்த்தும் பேனா!


எழுத்து மற்றும் இலக்கண பிழைகளை உணர்த்தும் பேனா!
அடுத்த வாரம் விற்பனைக்கு வரவிருக்கின்ற ஜெர்மன் தயாரிப்பான பேனா, நாம் எழுதும் போது எழுத்துப் பிழையோ அல்லது இலக்கணப் பிழையோ இருந்தால் உடனே அதிர்வை உண்டாக்கி நம்மை உணர்த்தும். இதன் கண்டுபிடிப்பாளரின்(Falk and Mandy Wolsky) மகனின் எழுத்து பிழையே இதனை உருவாக்க காரணமாக இருந்ததாக தெரிவித்துள்ளனர். பலரையும் கவரும் இந்த பேனா AAA பேட்டரியால் இயங்கும். கூடவே இது கணினி மற்றும் ஸ்மார்ட் போன்களுடன் இணைப்பை ஏற்படுத்தும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் விலை இன்னும் சரியாக தெரியவில்லை, எனினும் $100- களாவது இருக்கும் என நம்பப்படுகிறது. இது பென்சில் பால்பாயிண்ட் மற்றும் மை என மூன்று விதத்திலும் பயன்படுத்தும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு மையோ காகிதமோ தேவையில்லை. கூடவே பல வண்ணங்களில் வருகிறது. மேலதிக விவரங்களுக்கு கீழே உள்ள அவர்களின் இணைப்பை பயன்படுத்துங்கள்!
தொடர்புக்கு: http://www.lernstift.com/press_en.html

ஞாயிறு, 28 ஜூலை, 2013

ஐபோணும் அதன் அவஸ்த்தைகளும்!


ஐபோணும் அதன் அவஸ்த்தைகளும்!
நல்ல ஒரு htc போனை வைத்திருந்த நான், போதாத காலத்திற்கு ஐபோனை வாங்கினேன். போன் கிடைத்த முதல் நாளே சிக்னல் பிரச்சினை. நோ சர்வீஸ், Searching. இப்படி ஒரே பிரச்சினை. உருப்படியா ஒரு வருடனும் பேச முடியவில்லை. T-Mobile ஐ தொடர்பு கொண்டதும் சில செட்டிங்களை மாற்றிதந்தார்கள். ஒரு பிரயோஜனமும் இல்லை. சில நேரம் நல்ல சிக்னல் கிடைக்கும் சில நேரம் கிடைக்காது. மீண்டும் T-Mobile ஐ தொடர்பு கொண்டதும், போனை திரும்ப அனுப்ப சொல்லிவிட்டார்கள் என் செலவில். போனா போகுதுன்னு அனுப்பி கொடுத்து விட்டேன். உடனே புதிய போன் ஒரு வாரத்திற்குள் அனுப்பி தந்துவிட்டார்கள். எதோ பிரச்சினை தீர்த்தது என நினைத்தால், இந்த புதிய போனிலும் அதே பிரச்சினை. மீண்டு தொடர்பு கொண்டதும், இதற்கு நீ ஆப்பிள் நிறுவனத்திடம் தான் போன் செய்ய வேண்டுமென சொல்லி, அவர்களின் எண்ணை கொடுத்தார்கள். அவர்களும் சில செட்டிங்-ஐ மாற்றி போடசொன்னார்கள். எனினும் என் பிரச்சினை தீரவில்லை. எதற்கும் கூகிளில் ஒன்று தேடி பார்போமே என தேடினால், இது என் பிரச்சினை மட்டுமல்ல, உலகளாவிய பிரச்சினை என தெரிய வந்தது. ஒவ்வருவரும் அவர்களுக்கு தெரிந்த சில வழி முறைகளை சொல்லியிருந்தார்கள். மொத்தத்தில் "ஐபோன் சிக்னல் விசயத்தில் மகா மட்டம்" என தெரியவந்தது.
இதை இப்படியே விட முடியாததால், ஆப்பிள் கிளைக்கு நேராக சென்று விட்டேன்.(நல்ல வேளை எனக்கு இது வீட்டின் பக்கம் என்பதால் பரவாயில்லை. சிலருக்கு 50 மைல்களுக்கும் அதிகமான தூரத்திற்கு செல்ல வேண்டி இருக்கும். காரணம் ஆப்பிள் கிளைகள் எல்லா ஊர்களிலும் கிடையாது). எனது போனை முழுவதுமாக பரிசோதித்த பின்னர், எந்த குறைபாடும் இல்லை, நீங்கள் போகலாம், தொடர்ந்து இதே பிரச்சினை வந்தால் அடுத்த வாரம் வரவும், என சொல்லி விட்டார்கள். ஆப்பிள் கிளையில் நின்ற போது போனின் சிக்னல் பார், ஐந்து பார்களிலும் காணித்து கொண்டே இருந்தது. இப்போதுதான் இந்த போனில் இப்படி ஒரு சிக்னலை, முதல் முறையாக பார்கிறேன். சரி, இன்னும் ஒரு வாரம் பார்ப்போமே என வீடு வந்தததுதான் தாமதம், மீண்டும் "பழைய குருடி கதவை திறடி" என்ற மாதிரி ஆகி விட்டது. கோபக்காரர்கள் என்றால் ஐபோனை எறிந்து உடைக்க நிறைய வாய்ப்பு உள்ளது. நல்ல வேளை நான் பொறுமை சாலி என்பதால், அப்படி ஒன்றும் ஆகவில்லை. இந்த ஐபோன் இப்படி தொடர்ந்து தொல்லை கொடுத்ததால், இது நோ சர்வீஸ், Searching , ஒரு பார் சிக்னல் இப்படி எல்லாவற்றையும் படம் பிடித்து மீண்டும், ஆப்பிள் கிளைக்கு ஆதாரங்களுடன் சென்றேன். மீண்டும் பரிசோதித்து விட்டு, உனக்கு புதிய வேறு ஒரு போன் தருகிறேன் என தந்தார்கள். ஆக, இரண்டு வாரத்தில் மூன்று ஐபோன்கள் மாற்றி விட்டேன். இது ஓரளவிற்கு பரவாயில்லை. இப்போது ஒரு கவர் போட்டுள்ளேன். காரணம் இந்த ஐபோனை கையில் எடுத்தாலே சிக்னல் குறைந்து விடும், இதன் ஏரியல் இந்த போனின் பக்கவாட்டோடு இணைக்கப்பட்டிருக்கிறதாம். நாம் கையில் எடுத்ததும் சிக்னல் குறைந்து விடுகிறதாம். கூகிளில் நிறைய ஆலோசனை வழங்கி இருக்கிறார்கள், ஆனால் எல்லாமே வீண். இது ஒரு தொழில் நுட்ப குறைபாடு. போனை தவிர்த்து பார்த்தால், இது ஒரு சிறந்த டிவைஸ் . App எல்லாமே மிகவும் நல்லது. ஒருவேளை ஐபோன்களை ஆப்பிள் நிறுவனம் சீனாவில் தயாரிப்பதால் இப்படி இருக்குமோ என்னவோ! சீனப் பெரும்சுவரை தவிர்த்து எந்த ஒரு சீன தயாரிப்புமே உருப்படியாக இல்லை. பின் குறிப்பு: கோபக்காரர்கள் ஐபோனை வாங்குவதை தவிர்ப்பது நல்லது.

சனி, 20 ஏப்ரல், 2013

புனித அருளானந்தர்!


போர்த்துக்கல்லின் புனித பிரான்சிஸ் சேவியர் என்று அழைக்கப்படும் இவர், போர்த்துக்கீஸ் நாட்டின் தலைநகரான லிஸ்பனில் 1647 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்றாம் நாள் பிறந்தார். குடும்பத்தின் கடைசி மகனான இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் ஜான் தே பிரிட்டோ என்பதாகும் . இந்த குடும்பம் மிகுந்த பக்தி உடையதாக விளங்கியது. இவருக்கு நான்கு வயதிருக்கும் போது தந்தையை இழந்தார். பதினைந்து வயதான போது குருவாக வேண்டும் என்ற ஆசை மனதில் தோன்றியது. அதற்காக இயேசு சபை குருமடத்தில் சேர்ந்தார். குருமடத்தில் படிக்கும் போது ஆசிய ஆப்ரிக்க நாடுகளில் இயேசுவை அறியாத மக்களைப் பற்றியும் அவர்களுக்கு இயேசுவின் அன்பை போதிக்கும் மறை பணியாளர்களை பற்றியும் கேள்விப்பட்டார். அவர்களுடைய ரத்த சாட்சி வாழ்வு அவரை மிகவும் கவர்ந்தது. பின்னர் பாரத பெரும் நாட்டிலே இயேசுவின் மறையை பரப்பி இயேசுவிற்காக மரித்து, தானும் ஒரு வேதசாட்சியாக வேண்டுமென்ற வைராக்கியத்துடன் இந்தியாவிற்கு புறப்பட்டார். கடல் வழியாக பாய்மரக்கப்பல் மூலம் மிகுந்த ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு, பல மாதங்களுக்கு பின் இந்தியாவிலுள்ள கோவா நகரத்தை அடைந்தார். அங்குள்ள தூய சவேரியார் ஆலயத்திற்கு சென்று இறைவனுக்கு நன்றி கூறிய பின்னர், அங்குள்ள இயேசு சபை குரு மடத்திற்கு சென்றார். அங்கு சில நாட்கள் தங்கி, அங்கிருந்த மறை பரப்பு பணியில் அனுபவமுள்ள வேறு குருக்களின் ஆலோசனையையும் பெற்றார். பின்னர் மேலதிகாரிகளின் விருப்பப்படி தமிழ்நாட்டிலுள்ள கொளை என்னும் கிராமத்திற்கு மறைபரப்புக்காக அனுப்பப்பட்டார். தனது பெயரை தமிழில் அருளானந்தர் என மாற்றினார். காவி உடை தரித்து மறைபணியை ஆரம்பித்தார். அடிகளாரின் வாழ்க்கை மிகவும் எளிமையாக இருந்தது. ஒரு நாளைக்கு ஒருவேளை காய்கறிகளையே உணவாக உண்டு தரையிலேயே படுத்து உறங்கினார். இரவில் நீண்ட நேரம் செபத்திலும் தியானத்திலும் செலவிடுவார். இவரின் போதனையை கேட்க மக்கள் திரள் திரளாக வரத்தொடங்கினர். அவர்களில் மனம்திரும்பியவர்களுக்கு திருமுழுக்கு கொடுத்தார். அவர் மறைபரப்பு பணியை ஆர்வத்துடன் செய்வதையும், ஏராளமான மக்கள் கிறிஸ்தவர்களாக மாறுவதையும் அப்பகுதியை ஆட்சி செய்த அரசன், குமரப் பிள்ளை கேள்விப்பட்டு மிகுந்த சினம் கொண்டு ஆட்களை அனுப்பி அருளானந்த்தரையும் சில உடன் ஊழியர்களையும் பிடித்தான். அரசனின் உத்தரவுப்படி அடிகளாரும் மற்ற ஊழியர்களும் அரசின் முன் நிறுத்தப்பட்டார்கள். சேதுபதி மன்னன் கிறிஸ்தவ மறையை பற்றி அடிகளாரிடம் பல கேள்விகளை எழுப்பினான். அவற்றிற்கெல்லாம் அடிகளார் தகுந்த பதிலளித்தார்! அவரின் வார்த்தைகளை கேட்ட மன்னன் மிகுந்த வியப்படைந்து, அவர்களை விடுதலை செய்தான். அருளானந்தர் அடிகளார் பத்தொன்பது ஆண்டுகள் மதுரை, தஞ்சை, செஞ்சி, வேலூர், கொள்கொண்டபுரம் ஆகிய ஐந்து இடங்களிலும் பல துன்பங்களை அனுபவித்து ஆயிரக்கணக்கான மக்களை திருமறையில் சேர்த்தார். ஆதலால் அடிகளாரை மக்கள் இரண்டாம் சவேரியாராக கருதினார்கள். அக்காலத்தில் சிறுவாளை என்னும் பகுதியை சிற்றரசனாக இருந்த தடியத்தேவர் என்பவர் ஆண்டுவந்தார். அவரை தீராத கொடிய நோய் வருத்தியது. மருத்துவர்களும் மந்த்திரவாதிகளும் சிகிச்சைக்காக வரவழைக்கப்பட்டனர். ஆனால் எவ்வித பயனுமில்லை. பின்னர் அருளானந்தரை கேள்விப்பட்டு அவரிடம் தன்னை குணப்படுத்தி தரும்படி தடியத்தேவர் கேட்டுக்கொண்டார். அடிகளார் தன் உபதேசியாரை அனுப்பி தடியத்தேவருக்காக ஜெபிக்கும் படி கேட்டுக்கொண்டார். உபதேசியார் ஜெபித்துக்கொண்டிருக்கும் போதே அங்கு அற்புதம் அரங்கேறியது. ஆம் தடியத்தேவர் நோயிலிருந்து விடுதலை பெற்றார். பின்னர் தடியத்தேவர் அடிகளாரிடம் சென்று தனக்கு திருமுழுக்கு கொடுக்கும்படி கேட்டார். திகைத்த அடிகளாரோ தனது ஆன்மீக குருவையும் உபதேசிமாரையும் அழைத்து ஆலோசித்த பின்னர், தடியத்தேவருக்கு திருமுழுக்கு கொடுக்க தீர்மானித்தார். அப்போது அவருக்கு திருமுழுக்கு கொடுப்பதில் வேறொரு சிக்கல் எழுந்தது. அவருக்கு மனைவிமார் ஐவர் இருந்தனர். இது கிறிஸ்தவத்தின் கொள்கைகளுக்கு எதிரானது. ஆதலால் தடியத்தேவரை அடிகளார் தனிமையில் அழைத்து விஷயத்தை விளக்கினார். அதைக்கேட்ட தடியத்தேவர் வீட்டிற்கு சென்று தன் மனைவிமார் அனைவரையும் அழைத்து, தானும் தன் முதல் மனைவியும் திருமுழுக்கு பெறப்போவதாகவும், மற்றவர்களுக்கு வேண்டிய அளவு பொருள் கொடுப்பதாகவும் வாக்களித்தார். இப்படி நடக்குமென அந்நால்வரும் எதிபார்கவில்லை. எனவே அவர்கள் அதற்கு காரணமான அருளானந்தரை பழிவாங்க எண்ணினார்கள். இவர்களில் ஒருவர் கடலாயி, அவர் சேதுபதி அரசனின் தங்கை மகள். அவள் தன் மாமனிடம் சென்று நடந்தவற்றை கூறி அழுதாள். இதனால் சினமடைந்த சேதுபதி அருளானந்தரை கைது செய்ய கட்டளையிட்டான். சேதுபதியின் சினம் எந்நேரமும் வெடிக்கலாம் என்பதையறிந்து அவர் இறைதிருவுளத்திற்கு தன்னை முழுவதும் கையளித்தார். 1693 ஆம் ஆண்டு ஜனவரி எட்டாம் நாள் காலையில் திருப்பலி நிறைவேற்றினார். அதுவே அவர் நிறைவேற்றிய கடைசி திருப்பலியாகும். அத்திருப்பலியில் தம்மை முற்றிலும் இறைவனுக்கு ஒப்புக்கொடுத்து விட்டு, சேதுபதியின் சேவகர்களுக்காக காத்திருந்தார். பிற்பகல் சேவகர்கள் வந்து அடிகளாரை கைது செய்து சேதுபதியிடம் கொண்டு சென்றனர். அவன் அவரை சிறையிலடைக்க உத்தரவிட்டான். பின்னர் அவருக்கு மரணதண்டனையும் வழங்க திட்டமிட்டான். இதையறிந்த தடியத்தேவர் சினம்கொண்டு, என் குருவை கொல்லும்முன் என்னை கொல்லும் என்றும், நாட்டு மக்களை உமக்கெதிராக திரட்டி உம்மை பழிவாங்குவேன் என எச்சரித்தான். இந்த துறவியை இங்கு கொன்றால் பெரும் குழப்பம் ஏற்படும் என எண்ணிய சேதுபதி, அவரை ஒரியூருக்கு கடத்த தீர்மானித்தான். ஏனென்றால் ஒரியூரின் ஆளுனன் உதயதேவன் சகோதரன் ஆவான். அங்கிருந்து நடைபயணமாக அவரை ஒரியூருக்கு கொண்டு சென்றான். மூன்று நாள்களுக்கு பின்னர் ஒரியூரை வந்தடைந்தனர். உதயதேவன் அடிகளாரை சிறையிலிட்டான். சில நாட்களுக்கு பின் அவருக்கு மரணதண்டனை நிறைவேற்ற கொலைக்களத்திற்கு கொண்டு சென்றனர். கொலைக்களத்தில் அவர் முழந்தாளிட்டு உருக்கமாக செபித்தார். கொலைகாரன் பெரிய கத்தியுடன் ஆயத்தமாக நின்றுகொண்டிருந்தான். செபத்தை முடித்த அடிகளார் எனது வேலை முடிந்தது என்றார். தலை வேறு, உடல் வேறு, என வெட்டப்பட்ட அவர் உடல் பறவைகளுக்கு உணவானது. அன்றிலிருந்து இன்றுவரை அவரை கொலை செய்த நிலப்பகுதி சிவந்து காணப்படுகிறது. இவ்வாறு, இயேசுவிற்காகவும் திருச்சபைகாகவும் கொலை செய்யப்பட்ட தூய அருளானந்தர் திருத்தந்தை ஒன்பதாம் பக்தி நாதரால் 1853 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 ஆம் நாள் அருளாளராக அறிவிக்கப்பட்டார். பின்னர் திருத்தந்தை பன்னிரண்டாம் பக்தி நாதரால் 1947 ஆம் ஆண்டு ஜூன் 22 ஆம் தியதி அருளானந்தரை புனிதர் என்ற நிலைக்கு உயர்த்தினார். பாரதத்தின் மீட்புக்காக தன் இன்னுயிரை கையளித்த தூய அருளானந்தர், "செந்நீர் சிந்திய சிவந்த பூமியாம்" ஒரியூரில் இவர் பெயரில் ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது. மேலும் சிவகங்கை மறை மாவட்டத்தின் பாதுகாவலராகவும் இவர் போற்றப்படுகிறார். எனவே ஜாதி மத பேதம் கடந்து அவருடைய மீட்புபணியை நாமும் நிறைவேற்ற அவரின் பரிந்துரையை நாடி ஜெபிப்போம்! சிவகங்கையின் பாதுகாவலரோ! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!