.

Loading...
வங்கி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வங்கி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 24 மே, 2011

வங்கியில் நீங்கள் கடன் வாங்கியவர்களா?

வங்கியில் நீங்கள் கடன் வாங்கியவர்களா?

இங்க்லாந்து, ஸ்காட்லாந்து, வட அயர்லாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய நாடுகளில் உள்ள வங்கிகளில், அல்லது நிதி நிறுவனங்களில் நீங்கள் கடன் வாங்கியிருந்தீர்கள் எனில், அந்த கடத்திற்கு காப்பீடு என சொல்லி, அல்லது சொல்லாமல் ஒரு தொகையை உங்களிடம் வசூலித்திருப்பார்கள். இது கண்டிப்பாக செலுத்த வேண்டும் என சட்டம் ஒன்றும் கிடையாது. இதை வங்கிகளும் நிதி நிறுவனங்களும் தவறாக பயன்படுத்தி தங்களின் வாடிக்கையாளர்களிடம் பெரும் தொகையை கொள்ளை அடித்துள்ளார்கள்! இதற்கு எதிராக நீதி மன்றத்தில் இப்போது தீர்ப்பு வந்துள்ளது. அதாவது வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் இப்படி வாடிக்கையாளர்களிடம் காப்பீடு என கறந்த பணத்தை திரும்ப கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

உதாரணமாக £6000.00 கடன் வாங்கியிருந்தால் சுமார் £850.00 நீங்கள் காப்பீடாக செலு த்தியிருப்பீர்கள். இப்போது இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி "கிளைம்ஸ் மேனேஜ்மென்ட் கம்பெனி" என அறியப்படும் நிறுவனங்கள் இப்படி பாதிக்கப்பட்டவர்களை குறிவைத்து அவர்களை தொடர்பு கொள்ளும்படி விளம்பரம் செய்கிறார்கள். தொலைகாட்சியை திறந்தாலே இவர்களின் விளம்பரம்தான். சும்மா இரண்டு காகிதங்களில் நிரப்பி விண்ணப்பிக்க வேண்டிய எளிதான வேலை இது. இதை செய்து தருகிறோம் என சொல்லி, இருபத்தைந்து சதவீதம் பணம் அதிலிருந்து பறித்து விடுவார்கள்.

இந்த "கிளைம்ஸ் மேனேஜ்மென்ட் கம்பெனி" சண்டை போட்டு ஒன்றும் வாங்கி தர வேண்டியதில்லை. காரணம் இதற்கு நாமே விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அனுப்பினால் போதும். நிச்சயமாக நிறைய தமிழர்கள் இப்படி வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் கடனை இந்த காப்பீடு கொடுத்தே வாங்கியிருப்பார்கள். அவர்களுக்கு அந்த பணம் திரும்ப கிடைக்கும்.

இதற்கான விண்ணப்ப படிவத்தின் இணைப்பை கீழே கொடுத்துள்ளேன். இந்த இணைப்பில் சென்று அதில் consumer questionnaire என்பதை சொடுக்கி தரவிறக்கம் செய்து விண்ணப்பிக்கவும்.
இந்த படிவத்தை பூர்த்தி செய்து நீங்கள் எந்த வங்கி அல்லது நிதி நிறுவனத்தில் கடன் பெற்றிருந்த்தீர்களோ, அவர்களுக்கு அனுப்பிக்கொடுக்கவும். தேவையில்லாமல் உங்களிடம் வசூலித்த காப்பீடு தொகையை திரும்ப தந்து விடுவார்கள். இது விசயமாக மேலதிக விபரங்களுக்கு அருகிலுள்ள "சிட்டிசென் அட்வைஸ் பீரோ" வை தொடர்பு கொள்ளுங்கள்.

செவ்வாய், 28 ஜூலை, 2009

பிறர் வங்கி அட்டையை பயன்படுத்தினால்!!!

பிறர் வங்கி அட்டையை பயன்படுத்தினால்!!!




பிறருடைய வங்கி அட்டையை பயன்படுத்துவது சட்டப்படி குற்றம். இருந்தாலும் சில நேரங்களில் நம் குடும்ப்பத்தில் உள்ளவர்களின் அட்டையை நாம் பயன்படுத்துவோம், சில நேரங்களில் இப்படி பயன்படுத்தும் போது நாம் தேவையில்லாத பிரச்சனையில் சிக்கிக்கொள்ள வாய்ப்புள்ளது. அப்படி ஒருமுறை நானும் சிக்கிக்கொண்டேன்.

இங்குள்ள "பிரைமார்க்" என்னும் துணிக்கடையில் வாங்கிய துணி ஒன்று சரியில்லாததால் திரும்ப கொடுக்க சென்றிருந்தேன். இங்கு எந்த கடையிலுமே நமக்கு வாங்கிய பொருள் திருப்தி இல்லையெனில் அதை இருபத்தி ஒன்பது நாட்களுக்குள் திரும்ப கொடுத்து முழு பணத்தையும் திரும்ப பெற்றுக்கொள்ளலாம். ஆனால் அப்பொருள் பயன் படுத்தாமல் இருக்கவேண்டும், மீண்டும் அவர்கள் விற்கும்படியாகவும் இருக்கவேண்டும். இது என்மனைவி வாங்கிய துணி. அவளும் கூட வந்திருந்தாள். ஆனால் அங்கு சென்றபோதுதான் தெரிந்தது. ஒரு நீண்ட வரிசையில் ஆட்கள் நின்று கொண்டிருப்பது. இப்படி ஒரு வசதி செய்யபட்டிருப்பதால் இஷ்டத்திற்கு எடுத்தவிட்டு மோசமான நிலையில் கூட திரும்ப கொண்டுவந்து கொடுக்கவும் நிற்பார்கள்.

இந்த பெரிய கூட்டத்தை பார்த்ததுமே என்மனைவி சொல்லிவிட்டாள், நமக்கு இவ்வளவு பெரிய கூட்டத்தில் காத்து நின்று திரும்ப கொடுக்க வேண்டாம், போய் விடுவோம்.

நான் இவ்வளவு தூரம் வந்த்துவிட்டு கொடுக்காமல் போனால் சரியில்லை. நான் வரிசையில் நிற்கிறேன். நீ போய் உட்கார்ந்துகொள் என்றேன். என்னுடைய முறை வந்தது. அது என்மனைவியின் வங்கி அட்டையில் வாங்கியதால் அவளின் அட்டையை கொடுத்தேன். அந்த பெண் என்னையம் பார்ப்பாள் கணினியின் திரையையும் பார்ப்பாள். ஆனால் என்னிடம் எதையும் கேட்கவில்லை. இதற்கிடையில் பக்கத்து சேவையில் உள்ளவர்கள் பணம் திரும்பபெற்று போய்க்கொண்டிருக்கிறார்கள்.

நான் இவ்வளவு காலதாமதம் ஏன்? என வினவவும் அவள் சொன்னாள். இது உன் அட்டையில்லையே! நான் சொன்னேன், இது என் மனைவியின் அட்டை. காரணம் Mrs Selvaraj என திரையில் தெரிந்ததுதான். இதற்குள்ளாக அவள் காவலர்களை அழைத்து இரண்டு காவலர்கள் வந்து என்னை விசாரிக்க தொடங்கிவிட்டனர். இது திருட்டு அட்டையென நினைத்து விட்டார்கள். நான் என் மனைவியின் அட்டை. கூட்டம் அதிகமானதால் அவள் அங்கே அமர்த்திருக்கிறாள் என்றேன். இதற்கிடையில் காவலர்களை கண்டவுடன் அவளும் ஓடி வந்துவிட்டாள் நல்ல வேளையாக என்னிடம் என் ஓட்டுனர் உரிமம் இருந்ததால் நான் Selvaraj என்பதை உறுதி செய்துவிட்டார்கள். கூடவே மனைவியும் இருந்ததால்.

இல்லையென்றால் வீண் பிரச்சனையாகி இருக்கும். இரண்டு பேருக்குமே திட்டு தந்து எச்சரித்து விட்டார்கள். என்ன இருந்தாலும் இது சட்டப்படி குற்றமே! பிறர் வங்கி அட்டையை பயன் படுத்துவதை தவிருங்கள்.

இந்த பதிவை படித்தமைக்கு மிக்க நன்றி! மீண்டும் நீங்கள் வரவேண்டுமென விரும்பும் செல்வராஜ்
உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!