.

Loading...
கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

இலவசம்! கல்விக்கு ஏனில்லை?

இலவசம்! கல்விக்கு ஏனில்லை?

தமிழக முதல்வர் தினம் ஒரு இலவசம் என அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த அளவு அது இலவசம், இது இலவசம் என அறிக்கைகள் வந்து கொண்டே இருக்கின்றன! ஆனால் மிகவும் தேவையான கல்வியை இலவசமாக கொடுப்போம் என்னும் அறிவிப்பை காணோம்.

இப்போது பத்திரிக்கைகளை படித்தால் தெரியும். மருத்துவ கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தும் பணம் கட்ட முடியாமல் செங்கல் சூளையில் வேலை பார்ப்பதையும், பொறியியல் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தும் பணம் கட்ட முடியாமல் கூலி வேலைக்கு செல்வதையும். இந்த மாதிரி சூழ்நிலையில் தள்ளப்படும் ஏழைகளுக்கு கல்வி ஏனில்லை இலவசம்? என்ற கேள்வி ஒவ்வரு சாமானியனுக்கும் வரும். இலவச மின்சாரம், இலவச பம்ப் செட்(இதற்கு சரியான தமிழ் தெரிந்தால் சொல்லுங்கள்), இலவச தொலைகாட்சி என அறிவித்துவரும் முதல்வருக்கு, இந்த கேள்வி வராதது வியப்பே!

முன்பெல்லாம் அரசு கல்லூரிகளில் மேற்படிப்பு இலவசமாகத்தான் இருந்தது. அதிக மதிப்பெண்களுடன் இலவசமாக மருத்துவ படிப்பையோ, பொறியியல் படிப்பையோ இந்தியாவில் படித்து விட்டு, முடித்த கையேடு இங்கிலாந்திலோ, அமெரிக்காவிலோ போய் வேலைக்கு சேர்ந்து விடுவார்கள். இப்படி ஒரு சிக்கல் இருந்ததால்தான், படிப்பிற்கான செலவை கட்டும்படியா, இப்படி ஒரு முறை அமலுக்கு வந்தது. ஆனால் அது இன்று விபரீதமாகி ஏழைகளை பாதிக்கும் படியாக போய் விட்டது.

இது மாதிரி பாதிக்கப்படும் ஏழைகளுக்கு இலவசமாக மேற்படிப்பை அரசு கண்டிப்பாக வழங்க வேண்டும். மேலே சொன்ன மாதிரி, அவர்கள் படிப்பை முடித்த கையேடு வெளிநாடு செல்ல அனுமதிக்காமல் சில வருடங்கள் இந்தியாவில் வேலை செய்யவேண்டும் என்னும் நிபந்த்தனையை வைக்கலாம். இந்தியாவில் வேலை கிடைக்குமா? என்பது வேறு விஷயம்.
இப்படி சகட்டு மேனிக்கு பணம் கட்ட சொல்வதால்தான் அது ஒரு வியாபார பொருளாகி இத்தனை தனியார் பொறியியல் மற்றும் மருத்துவக்கல்லூரிகளாய் உருவெடுத்துள்ளது. இப்படி மேற்படிப்பு இலவசமாக்கப்பட்டால், இந்த தனியார் கல்வி வியாபாரிகள் காணாமல் போய் விடுவார்கள்.

இந்த இலவச மின்சாரம் ஒன்றும் ஏழைக்கு பயன்படுவதில்லை. என் கிராமத்திலே ஒரு சென்று நிலம், ஒரு லட்சம் ருபாய் இன்று விலை போகிறது. அங்கே ஒரு ஏக்கர் நிலம் இருந்தால் அவன் கோடீஸ்வரன். அவனுக்கு எதற்கு இலவச மின்சாரம்? அப்படி இலவசத்தை கொடுத்து நீங்கள் தமிழனை மகிழ்விக்க வேண்டுமென்றால், கிரிக்கெட் போட்டியை காண அனுமதி இலவசம், தமிழக திரையரங்குகளில் திரைப்படம் காண அனுமதி இலவசம் என அறிவியுங்கள். இவை இரண்டும் தமிழனுக்கு மிகவும் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.
இல்லை, என் இலவச அறிவுப்புகள் இன்னும் தொடரும் என்றால், தயவு செய்து இந்த கல்வியும் இலவசம் என அறிவியுங்கள்!

புதன், 3 பிப்ரவரி, 2010

நீச்சல் கட்டாய பாடம்!

நீச்சல் கட்டாய பாடம்!

சமீப காலமாக பத்திரிகைகளில் தொடர்ந்து இந்த மாதிரி செய்திகள் வந்ததை பார்த்திருப்பீர்கள். "தேக்கடியில் படகு கவிழ்ந்து பலபேர் பலி". "குளத்தில் வேன் கவிழ்ந்து பள்ளி பிள்ளைகள் பலி". "ஆற்றில் பேருந்து கவிழ்ந்து பயணிகள் பலி". இதில் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி பலியானால் அதை தவிர்க்க முடியாமல் பலியானவர்கள் என்று சொல்லலாம். ஆனால் நீச்சல் தெரியாமல் இறந்தார்கள் என்றுகூட படித்தேன். இது மிகவும் மோசமான ஒரு செய்தி. இப்படி நீச்சல் தெரியாமல் இறந்தவர்கள், எதோ சிறுவர்கள் அல்ல! பெரியவர்கள், என்பது மிகவும் வேதனைக்குரிய செய்தி.



இன்று பெரும்பாலான வீடுகள், குளியலறை வசதியை கொண்டிருப்பதால், ஆறு, குளங்களில் சென்று குளிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது என்றுகூட சொல்லலாம். இதனால் சிறு குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக்கொள்ள வாய்ப்பே இல்லாமல் போய்விடுகிறது. இது உயிருக்கு ஆபத்து என்பதை யாரும் உணர்ந்ததாக தெரியவில்லை.

மிகவும் வளர்ச்சி அடைந்த நாகரீக காலத்தில் நீச்சல் தெரியாமல் இருப்பது அபத்தம் மட்டுமல்ல! ஆபத்தும் கூட.

இங்கு லண்டனில் ஆரம்ப பாடசாலைகளில் நீச்சலும் கற்றுக் கொடுக்கிறார்கள். சாதாரண பள்ளிகளில் மட்டுமல்ல, மாற்றுதிறன் படைத்த பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளிலும்கூட நீச்சல் கற்றுக் கொடுக்கிறார்கள். இதனால் நீச்சல் தெரியாமல் பிள்ளைகள் இறக்க வாய்ப்பே இல்லை. சமீபத்தில் தேக்கடி விபத்தில் வெள்ளைக்காரர்கள் நீந்தி தப்பித்தது நினைவிருக்கலாம். ஆனால் நம்மவர் பலர் நீச்சல் தெரியாமல் பலியாயினர். எனவே நம் பள்ளிகளிலும் நீச்சல் ஒரு பாடமாக அமையவேண்டும். இதை அமல் படுத்துவது கொஞ்சம் கடினமான காரியமாக தெரியலாம். ஆனால் அப்படி அமல் படுத்தினால் எதிர்காலத்தில் இது போன்ற விபத்துக்களை தடுக்கலாம்.

வளர்ச்சி அடைந்த நாடுகள் என்று சொல்லும் நாடுகளின் பள்ளிகளில்கூட, இலவச சத்துணவு திட்டங்கள் இல்லாதபோது, நம் பள்ளிகளில் அதை செயல்படுத்தும் நமக்கு, இந்த நீச்சலையும் செயல்படுத்த முடியும் என நம்புகிறேன். செயல் படுத்துவார்களா சம்பந்தபட்டவர்கள்?
உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!