.

Loading...

Thursday, 30 July 2009

எப்படியெல்லாமோ ஏமாற்றுகிறார்கள்!!

எப்படியெல்லாமோ ஏமாற்றுகிறார்கள்!!

அன்று நான் பணி நிமித்தமாக குமரி மாவட்டத்திலுள்ள அஞ்சுகிராமம் என்னும் ஊரில் நின்று கொண்டிருந்தேன். அப்போது சுமார் அறுபது வயது மதிக்கதக்க ஒரு பெரியவர் சிரித்துக்கொண்டே என்னை நோக்கி வந்துகொண்டிருந்தார். அவரை நான் கூர்ந்து கவனித்தபோது அவர் நான் ஏற்கனவே சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு என் வீட்டின் முன்பு வைத்து சந்தித்த நபர் என்பது தெரியவந்தது.

இப்போது அவரை நான் முதலாவதாக சந்தித்த நிகழ்ச்சி:

நான் மாலைவேளை என் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது, இதே பெரியவர் இப்படித்தான் சிரித்துக்கொண்டு வந்தார். அப்போது அவர் என்னிடம், நான் அஞ்சுகிராமத்திற்கு பக்கத்து ஊரிலிருந்து. இங்கு குளச்சலில்(என்னுடைய பக்கத்து ஊர்) ஒருவரை பார்க்க வந்திருந்தேன். அவரை பார்க்கவும் முடியவில்லை அதற்கிடையில் சுகமில்லாமல் குளச்சல் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கபட்டு இன்றுதான் வருகிறேன். இப்போது என் ஊருக்கு செல்லவும் பணமில்லை, சாப்பிடவும் வழியில்லை, பசி என்று சொன்னார்.

அவர் பசி என்று சொன்னதும், வீட்டில் சாப்பிடுகிறீர்களா? என கேட்டேன். அவரும் சரி என்று சொல்லவே நல்ல முறையில் அவருக்கு உணவு பரிமாறப்பட்டது. சாப்பிடுவதற்கு முன்பாக வீட்டில் வைக்கப்பட்டிருந்த, இயேசு கிறிஸ்துவின் படத்தை பார்த்ததும் ஒரு பெரிய ஜெபமே சொல்லிவிட்டுதான் உணவை உண்ண தொடங்கினார். நமக்கே இப்படி ஒரு பழக்கமில்லை. நல்ல பெரியவர் என மனதிற்குள் நினைத்துக்கொண்டேன்.

அவர் சாப்பிட்டு முடித்தபின் கைசெலவிற்கு பணமும் கொடுத்து பேருந்தில் ஏற்றி விட்டேன். இது ஒரு மூன்று மாதம்தான் ஆகியிருக்கும். அதன் பின்னர் இப்போதுதான் அவரை சந்திக்கபோகிறேன். அதுவும் அவர் என்னிடம் சொன்ன அதே கிராமத்தில். மனதிற்குள் மிகவும் சந்தோசமாக இருந்தது. நன்றி மறக்காத பெரியவர்! இப்போதும் என்னை ஞாபகம் வைத்துள்ளார் என நினைத்து முடிக்கவும், அவர் சிரித்தபடியே என்பக்கத்தில் வந்து சொன்னார்,

நான் குளச்சலுக்கு பக்கத்து ஊரிலிருந்து இங்கு ஒருவரை பார்க்கவந்தேன். அவரை பார்க்கமுடியவில்லை. அதற்கிடையில் சுகமில்லாமல் இங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்றுதான் வருகிறேன். இப்போது என் ஊருக்கு செல்லவும் பணமில்லை, சாப்பிடவும் வழியில்லை பசி என்று சொன்னார்.

எவ்வளவு மதிப்பாக இவரை வைத்திருந்தேன். இப்படி ஒரு அணுக்குண்டை தூக்கி போடப்போறார் என கொஞ்சம்கூட நினைக்கவில்லை. இருந்தாலும் அமைதியாக முதல் சந்திப்பை நினைவு படுத்தினேன். மனிதருக்கு உடனே ஞாபகம் வந்துவிட்டது. ஒரு நொடிகூட அவர் தாமதிக்கவில்லை. கன்னியாக்குமரியை நோக்கி அவர் படபட என நடக்க தொடங்கி விட்டார். நடந்தார் என்பதைவிட ஓடினார் என்பதே பொருத்தமாக இருக்கும். பெரியவரே! நில்லும் சாப்பாடு வாங்கி தருகிறேன் என்றேன். மனிதர் திரும்பி பார்க்கவேயில்லை.
சீ... எப்படியெல்லாமோ ஏமாற்றுகிறார்கள்!!

இந்த பதிவை படித்தமைக்கு மிக்க நன்றி! மீண்டும் நீங்கள் வரவேண்டுமென விரும்பும் செல்வராஜ்

6 comments :

சம்பத் said...

உண்மைதான் நண்பா...நிறைய பேர் இது போல இருக்கிறார்கள்...

Selvaraj said...

சம்பத் said...
உண்மைதான் நண்பா...நிறைய பேர் இது போல இருக்கிறார்கள்...

//இப்படிப்பட்டவர்களால் உண்மையிலேயே உதவி கேட்டு வருபவர்களையும்கூட சந்தேக கண்ணோடு பார்க்கவேண்டிய நிலைமையுள்ளது//

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இங்கும் பல ஆபிரிக்கர்கள் கோட் சூட்டுடன்
மணிபேர்சைப் தவற விட்டுவிட்டேன். என
நம்ம மணிக்கு கணக்கு வைத்து விடுவார்கள். காலம்கடந்து,
மறந்து போய் மீண்டும் அதே தடத்திலே சந்தித்து
நிலமை புரிந்து நழுவுவார்கள்.

Selvaraj said...

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
இங்கும் பல ஆபிரிக்கர்கள் கோட் சூட்டுடன்
மணிபேர்சைப் தவற விட்டுவிட்டேன். என
நம்ம மணிக்கு கணக்கு வைத்து விடுவார்கள். காலம்கடந்து,
மறந்து போய் மீண்டும் அதே தடத்திலே சந்தித்து
நிலமை புரிந்து நழுவுவார்கள்.

//எல்லா நாடுகளிலும் இப்படி பிழைப்பவர்கள் நிறைய இருக்கிறார்கள் போல!//

த. ஜார்ஜ் said...

வடசேரி பஸ் நிலையத்தில் நின்றிருந்தேன். அருகில் வந்த ஒரு நண்பர் 'என்னை தெரியலியா' என்றார்.எனக்கு உண்மையிலே தெரியவில்லை.
' நாம சேர்ந்து படிச்சோமே" என்றார்.
அடடா நான்தான் மறந்து விட்டேனோ என்று நினத்துக்கொண்டு பேச்சுகொடுத்தேன்.
'மனைவிக்கு சுகமில்ல.ஆஸ்பத்திரியில வச்சிருக்கேன்.செலவுக்கு பணமில்ல.ஊருக்கு போய் யாருகிட்டயாவது வாங்கிட்டு வரணும்.ஒரு நூறு ரூபா இருந்தா குடுங்களேன்'
கொடுத்துவிட்டு கேட்டேன்' ' நாம எந்த காலேஜ்ல சேர்ந்து படிச்சோம்'
'ஆமா எல்லாம் உனக்கு மறந்து போயிரும்' சொல்லிவிட்டு நடக்க தொடங்கியவர் கடைசிவரை அந்த ரகசியத்தை சொல்லவில்லை.
----
நமக்கும் இப்படி நடந்திருக்குப்பா

Selvaraj said...

த. ஜார்ஜ் said...

'மனைவிக்கு சுகமில்ல.ஆஸ்பத்திரியில வச்சிருக்கேன்.செலவுக்கு பணமில்ல.ஊருக்கு போய் யாருகிட்டயாவது வாங்கிட்டு வரணும்.ஒரு நூறு ரூபா இருந்தா குடுங்களேன்'


//நம்ம மாவட்டத்தில் நிறையப்பேர் இப்படி கிளம்ப்பி இருப்பாங்கபோலிருக்கு!//

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment

உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!