.

Loading...

திங்கள், 14 ஏப்ரல், 2014

வெளிநாட்டில் வேலை பார்க்கும் இந்தியர்கள் சார்பாக சில கோரிக்கைகள்...


வெளிநாட்டில் (வாழும் அல்ல) வேலை பார்க்கும் இந்தியர்கள் சார்பாக சில கோரிக்கைகள்... நடைபெறயிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலையொட்டி தாங்களெல்லாம் பரப்புரையில் மிகவும் பரபரப்பாக இருக்கின்ற இந்த நேரத்தில் எல்லோரும் ஒட்டுமொத்தமாக மறந்த வெளிநாட்டில் (வாழும் அல்ல) வேலை பார்க்கும் இந்தியர்கள் சார்பாக சில கோரிக்கைகள்... வெளிநாட்டு இந்தியர்கள் என்போர் இருவகைபடுவர். ஒருவர் குடும்பம் குட்டிகளோடு வெளிநாட்டிலேயே நிரந்தரமாக தங்கி, ஒரு தலைமுறைக்குப்பின் இந்திய வம்சாவழியினர் என்ற அழைக்கப்படுபவர்கள். இன்னொரு வகையினரோ சுவற்றில் அடிக்கப்பட்ட பந்தாய் எந்நேரமும் இந்தியாவுக்குள் திரும்பி வருவோர், சுருக்கமாக சொல்வதென்றால் வளைகுடாவாசியினர். மிகச்சிலரைத் தவிர வளைகுடா வாழ்க்கையை யாரும் விரும்பி ஏற்கவில்லை அதிலும் சிறுபான்மையினர் அரசியல் அதிகாரமின்மை, மேற்படிப்பறிவு மறுத்தல், படித்தாலும் அரசு வேலை மறுத்தல், வெகுசிலருக்கு விட்டில்பூச்சி மோகம் என வலிய இந்த வாழ்க்கைக்குள் தள்ளப்பட்டவர்கள். இங்கு இந்தியாவில் உள்ளவர்கள் நினைப்பது போன்று வீடு வாங்கவோ, நிலம் வாங்கவோ, நிரந்தர குடியுரிமையோ கிடைக்காது. இரண்டு வருடத்துக்கு ஒருமுறை அடிமைபத்திரம் (Contract) புதுப்பித்து கொண்டே இருக்கும். இங்கு உள்ள அரசு அல்லது வேலைபார்க்கும் நிறுவனம், அல்லது அரபி எப்போது இந்தியாவுக்கு போ (Exit) என்று சொல்லுவார்கள் என்று தெரியாது. ஏப்போது சொன்னாலும் அதேநாள் செல்ல தயாராக இருக்க வேண்டும். இந்த காரணத்தால் தங்கும் அறைகளில் கூட ஆடம்பர பொருட்கள் யாருமே வாங்கி உபயோகப்படுத்துவது கிடையாது. ஏ.கா சொல்ல வேண்டுமானால் 42 இஞ்ச் வண்ண தொலைகாட்சி பெட்டி வாங்கினால் கஷ்டப்பட்டு வாங்குபவர் அதை ஒரு வாரத்துக்கு மேல் பயன்படுத்த முடியாது. பயன்படுத்தவும் மாட்டார். எங்களில் மிகச்சாதாரண தொழிலாளியும் உண்டு, அரிய வாய்ப்பால் அறிவையும் உழைப்பையும் வெளிநாட்டினருக்காக வழங்கிக் கொண்டிருக்கும் உயர்நிலையோரும் உண்டு, அதாவது இந்தியா பயன்படுத்த தவறிய செல்வங்கள் நாங்கள். மேலும் நாங்கள் சம்பளத்திற்கு மேல் இந்திய அரசு ஊழியர்கள் போல கிம்பளத்தை கனவிலும் காண முடியாதவர்கள். எந்த நேரமும் சவூதியின் 'நிதாகத்' போன்ற சட்டங்களால் பாதிக்கப்பட இருப்பவர்கள், இவையல்லாமல் ஈராக் குவைத்தை ஆக்கிரத்தபோது உலகம் கண்டதே ஓர் காட்சி! பாலைவெளிகளில் உயிரை பிடித்துக் கொண்டு ஒடிவந்தோமே அதைபோன்ற நிலையை இன்னொரு முறை சந்திக்க மாட்டோம் என்பதற்கு எத்தகைய உத்தரவாதமும் இல்லாதவர்கள், இவற்றிற்கெல்லாம் மேல் எத்தனை கோடியை நீங்கள் கொட்டிக் கொடுத்தாலும் ஈடாகாத, வெளிநாட்டில் தனிமையில் தொலைந்த எங்களின் இளமை. அதேவேளை எங்களுக்கு வாழ்க்கைபட்டதற்கு தண்டனையாய் எங்கள் மனைவிமார்களோ கணவனிருந்தும் விதவைகள் போல் வாழும் ஒர் அவல வாழ்க்கை, போனில் மட்டுமே பொங்கும் அப்பன் பிள்ளை பாசம். இத்தனை தியாகத்திற்கு இடையே தவறாமல் நாங்கள் எங்கள் தேசத்திற்கு ஈட்டித் தரும் அந்நிய செலாவணி எனும் பெரும் பொருளாதாரம் ஆனால் கைமாறாக??? 1. விமான நிலையங்களில் வந்திறங்கினால் கஸ்டம்ஸ் அதிகாரிகளுக்கு நாங்கள் திருடர்களாய் மட்டுமே தெரிகிறோம், நாய்கள் கடித்துக் குதறுவதுபோல் எங்கள் பொருட்களை சின்னாபின்னப்படுத்துகிறார்கள். வீட்டுத்தேவைக்கு கொண்டு வரும் பொருட்களுக்குத் தான் எத்தனை சோதனைகள்?, கட்டுப்பாடுகள்? இதை தடுத்து நிறுத்தப்போவது யார்? 2. திருவனந்தபுரத்திற்கு வரும் தமிழக விமான பயணிகளை குதறும் கஸ்டம்ஸ், மலையாளிகளை மட்டும் மனிதர்களாய் மதிக்கின்றது. இந்த இன மானங்கெட்ட வாழ்கை மற்றும் மாச்சரியங்களை களைந்து அனைவரையும் இந்தியர்களாக நடத்த உழைக்கப்போவது யார்? 3. அனைத்து அரபு நாடுகளிலிருந்தும் மதுரை, திருச்சி, கோவை, போன்ற விமான நிலையங்களுக்கு நேரடியாக முதலில் வாரத்துக்கு மூன்று நாள் வீதம் விமானம் இயக்கி மக்களின் வரவேற்பை பொறுத்து தினசரியாக இயக்க வேண்டும். 4. துபையிலிருந்து திருச்சிக்கு இயக்கப்பட்ட ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானங்களும் தற்போது ஒவ்வொன்றாய் மாயமாக தொடங்கியுள்ளது. இவை முழுமையாய் மறைந்து தனியார் விமானங்களும் அண்டை நாட்டு விமானங்களும் அதிக பயண கட்டணத்துடன் எங்களை அச்சுறுத்துமுன் தடுத்து நிறுத்தப்போவது யார்? 5. திருச்சியிலிருந்து சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளுக்கு பட்ஜெட் கட்டண தனியார் மற்றும் அரசு விமான சேவைகள் அதிகரித்து வரும் நிலையில், வளைகுடா நாடுகளிலிருந்தும் திருச்சி, கோவை மற்றும் மதுரை விமான நிலையங்களை இணைத்து நேரடி பட்ஜெட் மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவைகளை துவங்கலாமே, இத்திட்டத்திற்கு மணி கட்டப்போவது யாரோ? 6. சொந்த பந்தங்களை காண வருடத்திற்கு ஒரு மாதமோ அல்லது இரு வருடத்திற்கு இரு மாதமோ விடுமுறையை பிச்சையாய் பெற்று வரும் நாங்கள் முன்பெல்லாம் அனைத்து நிறுவன விமானத்திலும் 40 கிலோ பயண பொதியை (Cabin Baggage) கொண்டு வர அனுமதிக்கப் பெற்றிருந்தோம். அதிக பொதிக்கு ஆசைப்பட்டே உருப்படாத நிர்வாகம், குறித்த நேர புறப்பாடு உத்திரவாதமில்லாத சர்வீஸ் என தெரிந்தும் ஏர் இந்தியா (எக்ஸ்பிரஸ் அல்ல) விமானத்தில் சென்னைக்கும், இதர நகரங்களுக்கும் பயணித்தோம் இப்போது அதிலும் கை வைத்து 10 கிலோவை குறைத்து விட்டார்கள், 40 கிலோ பொதியை (Cabin Baggage)மீண்டும் அனுமதித்தால் நாங்களும் பயன்பெறுவோம் அதன் மூலம் தொடர் நஷ்டத்தில் இயங்கிவரும் ஏர் இந்தியாவுக்கும் வருமானம் தானே? இந்த உண்மையை விமானத்துறையிடம் எங்களுக்காக யார் எடுத்துச் சொல்ல போகிறீர்கள்? 7. வளைகுடா இந்திய தொழிலாளிக்கும் எத்தனையோ பிரச்சனைகள் தான் பணிபுரியும் கம்பெனியுடன் ஏற்படத்தான் செய்கின்றன ஆனால் அண்டை நாடான இலங்கை தூதரகத்திற்கும், தன் பிரஜைகளின் உரிமைகளுக்காக எந்நேரமும் வரிந்து கட்டும் பிலிப்பைன்ஸ் தூதரகத்திற்கும் இருக்கும் அக்கரையில் நம் தூதரகத்தின் அக்கறை எத்தனை சதவிகிதம் என சொல்ல முடியுமா? மலையாளிகளின் வெளியுறவுத் துறை இந்திய அரசின் வெளியுறவு துறையாக மாற பாடுபட போவது யார்? தமிழக பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கேரளாவில் உள்ள M.P, M.L.Aக்கள் ஒன்னுக்கு போறதை குடிக்க வேண்டும். 8. வளைகுடா தொழிலாளர்கள் சந்திக்கும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பிரச்சனைகளை கேட்டு, அவற்றிற்கேற்றவாறு உதவிட வளைகுடா நாடுகளின் விடுமுறை நாட்களான வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இந்திய தூதரகம் சார்பாக சிறப்பு முகாம்களை தொடாந்து வாரம் ஒரு முறையோ அல்லது இரு வாரத்திற்கு ஒரு முறையோ நடத்தினால் எங்களுடைய பல்வேறு பிரச்சனைகளுக்கு சுமூக தீர்வு கிட்டுமே, உள்நாட்டில் ஆண்களில்லா பல குடும்பங்கள் பல்வகை கிரிமினல்கள், ஆக்கிரமிப்பாளர்களின் தொந்தரவிலிருந்து தப்பிக்க, எங்களின் உணர்வுகளை புரிந்து உதவப்போவது யார்? 9. வளைகுடாவிலிருந்து நாங்கள் விரட்டி அடிக்கப்பட்டால் அல்லது நாங்களாகவே முடித்துக்கொண்டு வந்தாலோ நாங்கள் இந்தியதன்மையை புரிந்து காலூன்றவே பல வருடங்கள் ஓடிவிடும், எங்களுக்கு உதவிட வட்டியில்லா கடன், மானியம், வாரியம் போன்றவற்றை நிறுவிட சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் முயற்சிக்கலாமே? எங்களுக்கு உதவ யாருக்கு இந்த நல்ல மனம் இருக்கிறது, செயலில் காட்டுவீர்களா? 10. இது தனியார் டிவி சேனல்களுக்கு: ஷேர், ஸ்டாக் மார்க்கெட், ஆன்லைன் வர்த்தகம், கம்மாடிட்டி, வருமானவரி, இன்{ரன்ஸ் என நிபுணர்களை கொண்டு எத்தனையோ ஆலோசனைகளை வழங்கும் தனியார் சேனல்களே, இரவு நேரத்தில் எங்களின் வெளிநாட்டு உரிமைகள் பற்றியும், வெளியுறவு துறை பற்றியும், தூதரகத்தின் பணிகள் பற்றியும், கஸ்டம்ஸ், இமிக்கிரேஷன் போன்றவை பற்றியும் வெளிநாட்டில் உழைக்கும் இந்தியர்கள் பற்றி அவ்வப்போது வரும் சட்டங்கள் மற்றும் திருத்தங்கள் பற்றியும் தமிழில் ஆலோசணை வழங்க முன்வரலாமே, குறைந்தபட்சம் வாரம் அல்லது மாதம் ஒருமுறையாவது வருவீர்களா? 11. வெளிநாடுகளில் வசிக்கும் எங்களின் பிள்ளைகள் இந்தியாவில் கல்வி பயிலுவதற்கு என கேந்திர வித்தியாலையா போன்ற பள்ளிகூடம் தமிழகத்தில் உள்ள அனைத்து தாலுகாவில் ஓர் பள்ளிக்கூடம் வீதம் அமைக்க வேண்டும். 12. வெளிநாடுகளில் வசிக்கும் எங்களின் பிள்ளைகள் உயர்கல்வி பெறுவதங்கு வசதியாக தமிழக அரசின் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு அமுல்படுத்த வேண்டும். 13. தமிழக அரசின் வெளிநாட்டில் வேலைவாலைவாய்ப்பு நிறுவனத்தின் பிரிவு அலுவலகத்தை Overseas Manpower Corporation Ltd மதுரை, கோவை, திருச்சி, நெல்லை போன்ற நகரங்களில் அமைக்க வேண்டும். 14. தமிழகத்தில் உள்ள தூத்துகுடி, சேலம், வேலூர், போன்ற விமான நிலையங்களை விரிவுபடுத்தவும், புதிதாக கன்னியாகுமரியில் விமான நிலையம் அமைக்க வேண்டும். 15. நாங்கள் 50 டிகிரி வெயிலில் நின்று வேலை செய்து அனுப்பும் காசை எங்கள் குடும்பங்கள் குடும்ப செலவுக்காக வேண்டி வங்கியிலிருந்து எடுப்பதற்கு காலையில் சென்றால் மாலையில்தான் வீட்டுக்கு வரக்கூடிய நிலை உள்ளது. ஆகவே அதை நிவிர்த்தி செய்வதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து தாலுகாவிலும் ஓர் வெளிநாடுவாழ் இந்தியர்க்கு மட்டும் NRI Branch என தனி வங்கி பிரிவு அமைக்க வேண்டும். 16.தமிழக அரசு வெளிநாடுவாழ் இந்தியருக்கு என தனியாக ஓய்வுஊதிய திட்டம், தனி இயக்ககம், கேரளாவில் உள்ளது போல் தனி அமைச்சகம் அமைக்க வேண்டும். 17. தமிழகத்தில் உள்ள அனைத்து பத்திரிகைகளிலும் ஒரு பக்கத்துக்கு வளைகுடா செய்திகள் என்று வெளியிட்டு Bahrain, Kuwait, Oman, Qatar, Saudi Arabia, United Arab Emirates , Jordan, Morocco, Yemen போன்ற நாடுகளில் உள்ள முக்கிய செய்திகளை வெளியிடுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். இவ்வாறு வளைகுடா செய்திகள் வெளியிடுவதால் குடும்பத்தினர் வெளிநாடுகளில் நடப்பதை உடனடியாக தெரிந்து கொள்ள முடியும். 18. தமிழகத்தில் உள்ள அனைத்து தொலைகாட்சிகளில் தினசரி வளைகுடா நேரம் இரவு 9:00 மணிக்கு வளைகுடா செய்திகள் என்று என்று வெளியிட்டு Bahrain, Kuwait, Oman, Qatar, Saudi Arabia, United Arab Emirates , Jordan, Morocco, Yemen போன்ற நாடுகளில் உள்ள முக்கிய செய்திகளை வெளியிடுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். இவ்வாறு வளைகுடா செய்திகள் வெளியிடுவதால் குடும்பத்தினர் வெளிநாடுகளில் நடப்பதை உடனடியாக தெரிந்து கொள்ள முடியும். இந்த வசதி தற்போது கேரளாவில் உள்ள அனைத்து தொலைகாட்சிகளிலும் உள்ளது. 19. தற்போது உள்ள அனைத்து விமான நிலையங்களிலும், விமான சேவை நிறுவனங்களிலும் அனைத்து அறிவிப்புகளும் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே அறிவிக்கப்படுகிறது. தமிழகத்தில் படிப்பறிவில்லாத ஏழை இளைஞர்கள் ஆங்கிலம் புரியாமல் மிகவும் அவதிப்படுகின்றனர். தமிழில் இந்த வசதிகள் அனைத்து விமானநிலையங்கள் மற்றும் விமான சேவை நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். 20 வெளிநாடுகளில் குடும்பத்துடன் வசிக்கும் நபர்கள் தங்கள் பிள்ளைகள் தமிழ் மொழி படிப்பதற்கு அரபு நாடுகளில் உள்ள அனைத்து இந்தியன் பள்ளிகளில் (Indian Schoolகளில் ) தமிழ்மொழியை மொழி பாடமாக படிக்க தமிழக அரசு முயற்சி செய்து அதற்கான வசதி ஏற்படுத்த வேண்டும். இறுதியாக ஒன்றை கூறி நிறைவு செய்கின்றோம், நாங்கள் யாரும் தனி ஆட்கள் அல்ல மாறாக நாங்கள் சொன்னால் மதித்து கேட்கக்கூடிய, மதுவுக்கோ பணத்திற்கோ மயங்காத குடும்ப வாக்காளர்கள் என்ற ஜன சமுத்திரம் எங்கள் பின்னால் உள்ளதை புரிந்து கொண்டு வெளிநாட்டில் வேலை பார்க்கும் எங்களின் குறைகளையும் களைய முன் வருவீர்கள் என்ற நல்லெண்ணத்துடன் இப்போதைக்கு இத்துடன் நிறைவு செய்கின்றோம். வளைகுடாவில் பணியாற்றும் இந்தியர்கள் சார்பாக, Yours faithfully Kanyakumari District NRI Welfare Association, Post Box 1026 Post code 611 Nizwa, Sultanate of Oman

8 கருத்துகள் :

kappal kumar சொன்னது…

நல்ல கருத்து

Meshak சொன்னது…

வளைகுடாவில் வசிக்கும் நம்மைப்போலவர்களின் வலிகளை எல்லாம் நினைத்து பார்க்கும் அளவுக்கு நம்ம வேட்பாளர்களுக்கு நேரம் இருக்குமா? என்ன?

வேகநரி சொன்னது…

தேவையான கருத்து.

எம்.ஞானசேகரன் சொன்னது…

மிகவும் யோசித்து எல்லா பிரச்னைகளைப் பற்றியும் எழுதியிருக்கிறீர்கள். முதலில் பாராட்டுக்கள். நானும் ஒரு காலத்தில் வளைகுடா நாட்டில் பணிபுரிந்தவன்தான். அதனால் இதன் கொடுமைகளை நேரிடையாக அனுபவித்தவன். இதற்கு ஒன்று முக்கியமாக தேவை, அது ஒற்றுமை! அதுதான் நம் தமிழர்களிடத்தில் இல்லையே. உங்கள் அமைப்பை தமிழ்நாடளவில் உருவாக்குங்கள். தொடர்ந்து கவனத்தை நம்மீது அரசு செலுத்தும்வரை போராடினால் நிச்சயம் வருங்காலத்திலாவது விடிவு கிடைக்கும்.

Marimuthu Udhayakumar சொன்னது…

நல்ல கருத்து, தேவையான கருத்து.

Tamil Indian சொன்னது…

உங்களுக்கு உங்கள் கவலை. இங்கிருப்பவருக்கு இன்னும் நிறைய‌ கவலை. அவரவர்க்கு அவரவர் கவலை.

hassan சொன்னது…

சங்கை ஊதி இருக்கிறீர்கள்.

jasurajatamilarasu சொன்னது…

சகோதரர் அவர்கழுக்கு நன்றி

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!