.

Loading...

Thursday, 10 December 2009

கல்லூரியில் முதல் நாள்!

கல்லூரியில் முதல் நாள்!

என் நூறாம் பதிவை நான் படித்த கல்லூரிக்கு சமர்ப்பிக்கிறேன்!
பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரிக்கு செல்வதில் காலதாமதம் ஆகியதால், விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்காமல் போகவே, ஆரல்வாய்மொழியிலுள்ள அறிஞர் அண்ணா கல்லூரியில் சேரவேண்டிய நிலைமை ஏற்பட்டது. இந்த கல்லூரிக்கு செல்ல இரண்டு பேருந்துகளை பிடிக்க வேண்டியிருந்தது. கல்லூரியில் சேர்க்க என் அப்பா என்னை அழைத்து போயிருந்தார்.

அப்போது இந்த கல்லூரியின் முதல்வராக திரு சங்கரலிங்கம் அவர்கள் இருந்தார்கள். இருந்தாலும் இவர் கல்லூரியில் அவ்வளவாக இருப்பதில்லை. காரணம் அப்போது பக்கா தி.மு.க காரரான இவர், தமிழக அரசின் மேல்சபையின் எதிர்கட்சி தலைவராக இருந்தார். எனவே துணை முதல்வரான பரவைக்கரச பிள்ளைதான் முதல்வர் போல் செயல் பட்டுக்கொண்டிருந்தார். அவரை தான் சந்தித்தோம். என்னை மேலும் கீழும் பார்த்த அவர் மதிப்பெண் பரவாயில்லை. இருந்தாலும் இப்படி முடி வளர்த்திருக்கிறான். இப்படி முடி அதாவது ஸ்டெப் கட்டிங் பண்ணியிருக்கிறவர்களுக்கு எங்கள் கல்லூரியில் இடம் தரமுடியாது என சொல்லிவிட்டார். அப்போது ஸ்டெப் கட்டிங்கும் பெல் பாட்டமும் பிரபலமாக இருந்த நேரம். கூடவே ஒரே ஒரு இடம்தான் இருக்கு முடி வெட்டி விட்டு வந்தாதான் தருவோம்! என சொல்லி விட்டார். என் அப்பாவிற்கோ என் மேல் பயங்கர கோபம். பாஷன் மண்ணாம்கட்டி என திட்டி தீர்த்தார். அப்பா துணை முதல்வரிடம் சொன்னார், இப்பவே முடி வெட்டி கூட்டிக்கிட்டு வாறேன் சார். இந்த இடத்தை வேறு யாருக்கும் கொடுத்திடாதீங்க என, துணை முதல்வரும் சரியென சொல்லவே, கல்லூரியில் இருந்து ஆரல்வாய்மொழி நோக்கி நடந்தோம். அப்பத்தான் ஆரல்வாய்மொழி காற்று எப்படி அடிக்கிறது என தெரிந்து கொண்டேன். இருந்தாலும் அப்பாவின் அர்ச்சனை தொடர்ந்து இருந்து கொண்டிருந்ததால் அந்த காற்றை அனுபவிக்க முடியாமல் இருந்தது.

கடைக்குள் நுழைந்தோம், அப்பாவே சொன்னார் ரெம்ப சின்னதா வெட்டுங்க. என்னை பேசவே விடவில்லை. ஊரில் ஒரே ஒரு கடையில் தான் தொடர்ந்து முடி வெட்டுவேன். இது மனதிற்கு கஷ்டமாக இருந்தாலும் வேறு வழியில்லையென ஆகி விட்டது. முடி வெட்ட வெட்ட அப்பா கடைக்காரரிடம் நடந்ததை சொல்லிக்கொண்டிருந்தார். கடைக்காரரும் நல்ல கல்லூரி, இந்த மாதிரி கல்லூரியில் படிக்கிறதுதாங்க பசங்களுக்கு நல்லதென சொன்னார். மீண்டும் துணை முதல்வரை சந்தித்ததும் நிறைய கட்டுப்பாடுகளை சொல்லி சேர்த்துக்கொண்டார். கூடவே ஒரு நாளை வீணாக்க வேண்டாம் இன்றே வகுப்பிற்கு போக சொல்லி விட்டார். இடையே ஆசிரியர்களின் பெயர் அட்டவனையை பார்த்தால் படிப்பை போட்டார்களோ இல்லையோ பெரும்பாலானவர்களின் பெயரில் கூடவே பிள்ளை எனபோட்டிருந்தார்கள்.

வகுப்பறையில் இடையிலேயே சென்றதால், எல்லா மாணவரும் என்னையே பார்த்தனர். தமிழ் பாடம் நடந்து கொண்டிருந்தது. ஆசிரியரை பார்த்ததும் ஒரு சிறிய அதிர்ச்சி ஏற்கனவே நான் பார்த்திருக்கிறேன். என்னிடம் ஆசிரியர் ஊரை கேட்டார். சொன்னதும் படித்த பள்ளிக்கூடத்தை கேட்டார். பள்ளியின் பெயரை சொன்னேன், உடனே என்னை தெரியுமா? என கேட்டார். ஆம் தெரியும் என்றேன். எப்படி மறக்க முடியும் இந்த பெயரை? என மனதிற்குள் நினைத்து கொண்டேன். ஏனென்றால் அவர் பெயர் ஆபத்து காத்த பிள்ளை. மதிய இடைவேளை வந்தது, ஒரு மாணவன் வந்து கேட்டான். என்ன முடி வெட்டிகிட்டு சேர்ந்தியா? அடப் பாவி இவனுக்கு எப்படி தெரியும் என நினைக்கவும் அவன் சொன்னான், நானும் ஒன்ன மாதிரி ஸ்டெப் கட்டிங் பண்ணியிருந்தேன். நான் மட்டுமில்லை என சொல்லிவிட்டு இன்னும் கொஞ்சம் பேரை காண்பித்தான். பரவாயில்லை! நம்மை போல வேறயும் மாணவர்கள் இருக்கிறார்கள் என்றதும் கொஞ்சம் சந்தோசம். கூடவே சொன்னான், பெரிய பசங்க எல்லாம் ஸ்டெப் கட்டிங் பண்ணியிருக்காங்க! கல்லூரியில் சேர்க்கும் போதுதான் இப்படி கெடுபிடி இருக்கும், நமக்கு இனி முடி வளத்துக்கலாம். இன்னும் சிலபேர் உனக்கு தமிழ் வாத்தியாரை தெரியுமா? என கேட்டனர். நான் படித்த பள்ளியின் வெள்ளிவிழாவில் நடந்த பட்டி மன்றத்தில் பேச வந்த்திருந்தார் என்றேன்.

ஒருவன் சொன்னான் மச்சான், இந்த கல்லூரிக்கு என் பள்ளிக்கூடமே மேல்! சைட் அடிக்க பொண்ணுங்களாவது உண்டு! இது மாணவர்கள் மட்டும் என்பதால் அதுவும் இல்லாம போச்சி.
(இப்போது இந்த கல்லூரியில் பெண்களும் உண்டு) நான் உடனே சொன்னேன், என் வயிற்றெரிச்சலை கிளப்பாத, நான் படிச்ச பள்ளிக்கூடமே பசங்களுக்கு மட்டும்தான். ஒரு வழியா வகுப்பு முடிந்து கல்லூரியில் இருந்து, நாகர்கோவில் செல்லும் அரசின் சிறப்பு பேருந்தில் சென்றேன். கொஞ்சம் தூரம் சென்றதும் பின்னால் திரும்பி பார்த்தால்! இரண்டு பேர் பேருந்தை தொடர்ந்தது ஸ்கூட்டரில் வருவது தெரிந்தது. பக்கத்து பையனிடம் கேட்ட போது சொன்னான், விஷயம் தெரியாதா? அவர்கள் இருவரும் கல்லூரி ஆசிரியர்கள்! நாகேர்கோவிலை சேர்ந்தவர்கள், பசங்கள் பேருந்தில் தொங்கி பயணம் செய்யாமல் இருக்க கண்காணித்து வருகிறார்கள் என்றான். சில நாட்களில் இவர்களின் இம்சையும் உண்டு! இதை கேட்டதும் எனக்கு போதும்டா என ஆகி விட்டது. இது கல்லூரியா அல்ல சிறைச்சாலையா? என கேட்க தோன்றியது. இப்படித்தான் கல்லூரியின் முதல் நாள் இருந்தது.

என்ன இருந்தாலும் இந்த கல்லூரி அனுபவம், எனக்கு காட்டு நெல்லிக்காயை சாப்பிடுவது போல இருந்தது. "முன்னே கசக்கும் பின்னே இனிக்கும்".

0 comments :

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment

ஆங்கிலத்தில் தட்டச்சி செய்து தமிழில் மாற்றிட...

உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!