.

Loading...

சனி, 20 ஏப்ரல், 2013

புனித அருளானந்தர்!


போர்த்துக்கல்லின் புனித பிரான்சிஸ் சேவியர் என்று அழைக்கப்படும் இவர், போர்த்துக்கீஸ் நாட்டின் தலைநகரான லிஸ்பனில் 1647 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்றாம் நாள் பிறந்தார். குடும்பத்தின் கடைசி மகனான இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் ஜான் தே பிரிட்டோ என்பதாகும் . இந்த குடும்பம் மிகுந்த பக்தி உடையதாக விளங்கியது. இவருக்கு நான்கு வயதிருக்கும் போது தந்தையை இழந்தார். பதினைந்து வயதான போது குருவாக வேண்டும் என்ற ஆசை மனதில் தோன்றியது. அதற்காக இயேசு சபை குருமடத்தில் சேர்ந்தார். குருமடத்தில் படிக்கும் போது ஆசிய ஆப்ரிக்க நாடுகளில் இயேசுவை அறியாத மக்களைப் பற்றியும் அவர்களுக்கு இயேசுவின் அன்பை போதிக்கும் மறை பணியாளர்களை பற்றியும் கேள்விப்பட்டார். அவர்களுடைய ரத்த சாட்சி வாழ்வு அவரை மிகவும் கவர்ந்தது. பின்னர் பாரத பெரும் நாட்டிலே இயேசுவின் மறையை பரப்பி இயேசுவிற்காக மரித்து, தானும் ஒரு வேதசாட்சியாக வேண்டுமென்ற வைராக்கியத்துடன் இந்தியாவிற்கு புறப்பட்டார். கடல் வழியாக பாய்மரக்கப்பல் மூலம் மிகுந்த ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு, பல மாதங்களுக்கு பின் இந்தியாவிலுள்ள கோவா நகரத்தை அடைந்தார். அங்குள்ள தூய சவேரியார் ஆலயத்திற்கு சென்று இறைவனுக்கு நன்றி கூறிய பின்னர், அங்குள்ள இயேசு சபை குரு மடத்திற்கு சென்றார். அங்கு சில நாட்கள் தங்கி, அங்கிருந்த மறை பரப்பு பணியில் அனுபவமுள்ள வேறு குருக்களின் ஆலோசனையையும் பெற்றார். பின்னர் மேலதிகாரிகளின் விருப்பப்படி தமிழ்நாட்டிலுள்ள கொளை என்னும் கிராமத்திற்கு மறைபரப்புக்காக அனுப்பப்பட்டார். தனது பெயரை தமிழில் அருளானந்தர் என மாற்றினார். காவி உடை தரித்து மறைபணியை ஆரம்பித்தார். அடிகளாரின் வாழ்க்கை மிகவும் எளிமையாக இருந்தது. ஒரு நாளைக்கு ஒருவேளை காய்கறிகளையே உணவாக உண்டு தரையிலேயே படுத்து உறங்கினார். இரவில் நீண்ட நேரம் செபத்திலும் தியானத்திலும் செலவிடுவார். இவரின் போதனையை கேட்க மக்கள் திரள் திரளாக வரத்தொடங்கினர். அவர்களில் மனம்திரும்பியவர்களுக்கு திருமுழுக்கு கொடுத்தார். அவர் மறைபரப்பு பணியை ஆர்வத்துடன் செய்வதையும், ஏராளமான மக்கள் கிறிஸ்தவர்களாக மாறுவதையும் அப்பகுதியை ஆட்சி செய்த அரசன், குமரப் பிள்ளை கேள்விப்பட்டு மிகுந்த சினம் கொண்டு ஆட்களை அனுப்பி அருளானந்த்தரையும் சில உடன் ஊழியர்களையும் பிடித்தான். அரசனின் உத்தரவுப்படி அடிகளாரும் மற்ற ஊழியர்களும் அரசின் முன் நிறுத்தப்பட்டார்கள். சேதுபதி மன்னன் கிறிஸ்தவ மறையை பற்றி அடிகளாரிடம் பல கேள்விகளை எழுப்பினான். அவற்றிற்கெல்லாம் அடிகளார் தகுந்த பதிலளித்தார்! அவரின் வார்த்தைகளை கேட்ட மன்னன் மிகுந்த வியப்படைந்து, அவர்களை விடுதலை செய்தான். அருளானந்தர் அடிகளார் பத்தொன்பது ஆண்டுகள் மதுரை, தஞ்சை, செஞ்சி, வேலூர், கொள்கொண்டபுரம் ஆகிய ஐந்து இடங்களிலும் பல துன்பங்களை அனுபவித்து ஆயிரக்கணக்கான மக்களை திருமறையில் சேர்த்தார். ஆதலால் அடிகளாரை மக்கள் இரண்டாம் சவேரியாராக கருதினார்கள். அக்காலத்தில் சிறுவாளை என்னும் பகுதியை சிற்றரசனாக இருந்த தடியத்தேவர் என்பவர் ஆண்டுவந்தார். அவரை தீராத கொடிய நோய் வருத்தியது. மருத்துவர்களும் மந்த்திரவாதிகளும் சிகிச்சைக்காக வரவழைக்கப்பட்டனர். ஆனால் எவ்வித பயனுமில்லை. பின்னர் அருளானந்தரை கேள்விப்பட்டு அவரிடம் தன்னை குணப்படுத்தி தரும்படி தடியத்தேவர் கேட்டுக்கொண்டார். அடிகளார் தன் உபதேசியாரை அனுப்பி தடியத்தேவருக்காக ஜெபிக்கும் படி கேட்டுக்கொண்டார். உபதேசியார் ஜெபித்துக்கொண்டிருக்கும் போதே அங்கு அற்புதம் அரங்கேறியது. ஆம் தடியத்தேவர் நோயிலிருந்து விடுதலை பெற்றார். பின்னர் தடியத்தேவர் அடிகளாரிடம் சென்று தனக்கு திருமுழுக்கு கொடுக்கும்படி கேட்டார். திகைத்த அடிகளாரோ தனது ஆன்மீக குருவையும் உபதேசிமாரையும் அழைத்து ஆலோசித்த பின்னர், தடியத்தேவருக்கு திருமுழுக்கு கொடுக்க தீர்மானித்தார். அப்போது அவருக்கு திருமுழுக்கு கொடுப்பதில் வேறொரு சிக்கல் எழுந்தது. அவருக்கு மனைவிமார் ஐவர் இருந்தனர். இது கிறிஸ்தவத்தின் கொள்கைகளுக்கு எதிரானது. ஆதலால் தடியத்தேவரை அடிகளார் தனிமையில் அழைத்து விஷயத்தை விளக்கினார். அதைக்கேட்ட தடியத்தேவர் வீட்டிற்கு சென்று தன் மனைவிமார் அனைவரையும் அழைத்து, தானும் தன் முதல் மனைவியும் திருமுழுக்கு பெறப்போவதாகவும், மற்றவர்களுக்கு வேண்டிய அளவு பொருள் கொடுப்பதாகவும் வாக்களித்தார். இப்படி நடக்குமென அந்நால்வரும் எதிபார்கவில்லை. எனவே அவர்கள் அதற்கு காரணமான அருளானந்தரை பழிவாங்க எண்ணினார்கள். இவர்களில் ஒருவர் கடலாயி, அவர் சேதுபதி அரசனின் தங்கை மகள். அவள் தன் மாமனிடம் சென்று நடந்தவற்றை கூறி அழுதாள். இதனால் சினமடைந்த சேதுபதி அருளானந்தரை கைது செய்ய கட்டளையிட்டான். சேதுபதியின் சினம் எந்நேரமும் வெடிக்கலாம் என்பதையறிந்து அவர் இறைதிருவுளத்திற்கு தன்னை முழுவதும் கையளித்தார். 1693 ஆம் ஆண்டு ஜனவரி எட்டாம் நாள் காலையில் திருப்பலி நிறைவேற்றினார். அதுவே அவர் நிறைவேற்றிய கடைசி திருப்பலியாகும். அத்திருப்பலியில் தம்மை முற்றிலும் இறைவனுக்கு ஒப்புக்கொடுத்து விட்டு, சேதுபதியின் சேவகர்களுக்காக காத்திருந்தார். பிற்பகல் சேவகர்கள் வந்து அடிகளாரை கைது செய்து சேதுபதியிடம் கொண்டு சென்றனர். அவன் அவரை சிறையிலடைக்க உத்தரவிட்டான். பின்னர் அவருக்கு மரணதண்டனையும் வழங்க திட்டமிட்டான். இதையறிந்த தடியத்தேவர் சினம்கொண்டு, என் குருவை கொல்லும்முன் என்னை கொல்லும் என்றும், நாட்டு மக்களை உமக்கெதிராக திரட்டி உம்மை பழிவாங்குவேன் என எச்சரித்தான். இந்த துறவியை இங்கு கொன்றால் பெரும் குழப்பம் ஏற்படும் என எண்ணிய சேதுபதி, அவரை ஒரியூருக்கு கடத்த தீர்மானித்தான். ஏனென்றால் ஒரியூரின் ஆளுனன் உதயதேவன் சகோதரன் ஆவான். அங்கிருந்து நடைபயணமாக அவரை ஒரியூருக்கு கொண்டு சென்றான். மூன்று நாள்களுக்கு பின்னர் ஒரியூரை வந்தடைந்தனர். உதயதேவன் அடிகளாரை சிறையிலிட்டான். சில நாட்களுக்கு பின் அவருக்கு மரணதண்டனை நிறைவேற்ற கொலைக்களத்திற்கு கொண்டு சென்றனர். கொலைக்களத்தில் அவர் முழந்தாளிட்டு உருக்கமாக செபித்தார். கொலைகாரன் பெரிய கத்தியுடன் ஆயத்தமாக நின்றுகொண்டிருந்தான். செபத்தை முடித்த அடிகளார் எனது வேலை முடிந்தது என்றார். தலை வேறு, உடல் வேறு, என வெட்டப்பட்ட அவர் உடல் பறவைகளுக்கு உணவானது. அன்றிலிருந்து இன்றுவரை அவரை கொலை செய்த நிலப்பகுதி சிவந்து காணப்படுகிறது. இவ்வாறு, இயேசுவிற்காகவும் திருச்சபைகாகவும் கொலை செய்யப்பட்ட தூய அருளானந்தர் திருத்தந்தை ஒன்பதாம் பக்தி நாதரால் 1853 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 ஆம் நாள் அருளாளராக அறிவிக்கப்பட்டார். பின்னர் திருத்தந்தை பன்னிரண்டாம் பக்தி நாதரால் 1947 ஆம் ஆண்டு ஜூன் 22 ஆம் தியதி அருளானந்தரை புனிதர் என்ற நிலைக்கு உயர்த்தினார். பாரதத்தின் மீட்புக்காக தன் இன்னுயிரை கையளித்த தூய அருளானந்தர், "செந்நீர் சிந்திய சிவந்த பூமியாம்" ஒரியூரில் இவர் பெயரில் ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது. மேலும் சிவகங்கை மறை மாவட்டத்தின் பாதுகாவலராகவும் இவர் போற்றப்படுகிறார். எனவே ஜாதி மத பேதம் கடந்து அவருடைய மீட்புபணியை நாமும் நிறைவேற்ற அவரின் பரிந்துரையை நாடி ஜெபிப்போம்! சிவகங்கையின் பாதுகாவலரோ! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

0 கருத்துகள் :

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!