.

Loading...

ஞாயிறு, 10 மே, 2009

மரம் வெட்டும் மனிதன்!

மரம் வெட்டும் மனிதன்!

மரம் வெட்டி பிழைக்ககூடிய ஒரு ஏழை இருந்தான் . அவனுக்கு சொந்தமென இருந்தது என்னவோ இரண்டுதான். ஒன்று அவனின் மனைவி, மற்றொன்று அவனின் இரும்பு கோடாரி. இந்த ஒரு கோடாரியை வைத்துத்தான் அவன் மரம் வெட்டி அதில் கிடைக்கக்கூடிய பணத்தில் தன அன்றாட செலவை கழித்துவந்தான்.

ஒருநாள் ஆற்றங்கரையோரமாக உள்ள மரத்தை அதன் மேலிருந்து வெட்டிக்கொண்டிருந்தான். ஆற்றிலோ தண்ணீர் கரைபுரண்டோடியது. திடீரென்று அவனின் கோடாரி கைதவறி ஆற்றினுள் விழுந்து விடுகிறது. அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஆற்றினுள் இறங்கி தேடமுடியாதபடி தண்ணீர் கரைபுரண்டோடிக்கொண்டிருக்கிறது. கரையில் உட்கார்ந்து இனி என்ன செய்வது? இருந்த ஒரு கோடாரியும் இப்படி தொலைந்துபோய்விட்டதே! இனி, நான் எப்படி பிழைப்பேன்? என அழாத குறையாக புலம்பிகொண்டிருந்தான்.

திடீரென்று ஆண்டவரின் தூதர் அவனிடம் தோன்றி, ஏன் நீ சோகமாய் இருக்கிறாய்? என கேட்கிறான். தன ஒரே கோடாரி ஆற்றில் விழுந்துவிட்டதை சொல்கிறான். இதைக்கேட்ட ஆண்டவரின் தூதன் பட்டென ஒரு கோடாரியை அவனிடம் காண்பித்து, இதுவா உன் கோடாரியென கேட்கிறான். உடனே ஏழை மரம்வெட்டி இல்லை! இல்லை! இந்த தங்க கோடாரி என்னுடையது அல்ல என்கிறான். மீண்டும் ஆண்டவரின் தூதன் வேறு ஒரு கோடாரியை காண்பித்து இதுவா உன் கோடாரியென கேட்கிறான். மீண்டும் ஏழை மரம்வெட்டி இல்லை! இல்லை! இந்த வெள்ளி கோடாரி என்னுடையது அல்ல என்கிறான. மீண்டும்


ஆண்டவரின் தூதன் வேறு ஒரு கோடாரியை கொண்டுவந்து இதுவா, உன் கோடாரியென கேட்க, அப்போது ஆமா! ஆமா! இந்த இரும்புக் கோடாரிதான் என்னுடையது என்கிறான்.
இதைகேட்ட ஆண்டவரின் தூதன் ஏழையாகிய நீ நேர்மை உள்ளவனாக இருப்பதால். இந்த தங்ககோடாரி, வெள்ளிக்கோடாரி, இரும்புகோடாரி ஆகிய மூன்றையுமே வைத்துக்கொள், என சொல்லி மறைகிறார்.


அதன் பின்னர் இந்த மரம்வெட்டி தங்கம் மற்றும் வெள்ளி கோடாரிகளை விற்று ஓரளவு வசதியுடையவனாகி விடுகிறான். எனவே இவன் மரம் வெட்டும் தொழிலை விட்டுவிட்டு கிராமத்திலிருந்து சென்னை பட்டணத்திற்கு, தன மனைவியுடன் பயணமாகிறான். சென்னை பட்டணத்தை அடைந்ததும் வானளாவிய கட்டிடங்களை பார்த்து பிரமித்து நடக்கிறார்கள். இதனிடையில் அவசரமாக செல்லும் மக்கள் கூட்டம் இந்த கிராமத்து மரம் வெட்டியையும் அவன் மனைவியையும் பிரித்துவிடுகிறது. அவன் எங்கு தேடியும் அவன் மனைவி அவனுக்கு கிடைக்கவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் சோகமாக ஒரு ஓரமாக உட்கார்ந்து விடுகிறான்.
மீண்டும் ஆண்டவரின் தூதன் அவனிடம் தோன்றி, ஏன் சோகமாய் இருக்கிறாய்? என கேட்கிறான். அப்போது நடந்ததை சொல்கிறான். உடனே ஆண்டவரின் தூதன் பட்டென ஒரு அழகிய பெண்ணை கொண்டுவந்து இவளா உன் மனைவி என கேட்கிறான்?
உடனே மரம் வெட்டி, ஆமாம்! ஆமாம்! இவள்தான் என சொல்கிறான். ஆண்டவரின் தூதன் அவனிடம் நன்றாக பார் இவள்தானா உன் மனைவியென கேட்க. இவன் மீண்டும் ஆமாம்! என்கிறான்.

அப்போது ஆண்டவரின் தூதன் மரம் வெட்டியிடம், நீ ஏழையாக இருந்தபோது நேர்மையாக இருந்தாயே! இப்போது இப்படி நேர்மையற்றவனாக மாறிவிட்டாயே! இவள் உன் மனைவி இல்லையே. உடனே மரம் வெட்டி சொல்கிறான். இல்லை! இல்லை! நான் இப்போதும் நேர்மையுள்ளவனாகவே உள்ளேன்.

இவளை என் மனைவி இல்லையென சொன்னால் நீர் வேறு ஒரு பெண்ணை கொண்டுவருவீர். நான் அவளும் என் மனைவி இல்லையென சொல்வேன். நீர் மூன்றாவதாக என் மனைவியை கொண்டுவருவீர். இவள்தான் என் மனைவி என சொல்வேன். நீர் உடனே நீ நேர்மையுள்ளவனாக இருப்பதால் இந்த மூன்று பெண்களையுமே உன் மனைவியாக வைத்துக்கொள், என சொல்வீர். அதனால்தான் பயந்து அப்படி சொன்னேன்.

இதை கேட்ட ஆண்டவரின் தூதன், நீ பொய் சொன்னதால் இதோ! இந்த மூன்று பெண்களையும் உன் மனைவியாக வைத்துக்கொள் என சொல்லி மறைகிறான். இதை கேட்ட மரம் வெட்டி மூர்ச்சையாகி விழுகிறான்.

"ஆபத்து வருமென கருதி பொய் சொல்லாதீர்! அதுவே ஆபத்தாகலாம்".

பின் குறிப்பு: சும்மா கதைக்குத்தான், ஆண்டவர் இப்படி பழிவாங்க மாட்டார்.

2 கருத்துகள் :

Muhammad Ismail .H, PHD., சொன்னது…

@ அன்பின் செல்வராஜ்,

சிறுவயதில் இதை பாடபுத்தகத்தில் படித்தது மட்டுமில்லாமல், இதை இது வரை வாழ்க்கையில் கடைபிடித்து வரும் எனக்கு இந்த இற்றைப்படுத்தப்பட்ட கதையானது(updated version) மேலும் சில நல்ல செய்திகளை தந்தது. தற்போது மாணவர்களுக்கு இது போன்ற நீதி போதனை பாடங்களை பள்ளியில் நடத்துவதில்லை. அதற்கு பதிலாக நிதியைப்பற்றிய போதனைகள் தான் நடத்தப்படுகின்றன. :-(

இது போன்ற விஷயங்களை தொடர்ந்து எழுதி வாருங்கள். யாரும் பின்னூட்டம் இடவில்லையே என்ற கவலை வேண்டாம். உங்களுக்கு இதற்கான நன்மை - தீமையானது சித்ரகுப்த ஏடு > ஜீவ புத்தகம் > லவ்ஹீஃல் மக்பூஃல் என்றழைக்கப்படும் இறைவனது பாதுகாக்கப்பட்ட ஏட்டில் எழுதப்பட்டுவிடும். ஆகவே தொடந்து எழுதுங்கள். யாருக்கு போய் சேர வேண்டுமோ அவர்களுக்கு சரியாக போய் சேர்ந்து விடும். இதைப்போல் மிக நீண்ண்ண்ட , பதிவை விட பெரிய பின்னூட்டமும் உங்களை வந்தடையும். :-)))). மற்றவர்களைப்போல் கூகுளின் blogspot - லுள்ள hyper link - ஐப்பற்றி நீங்கள் கவலை பட தேவை இல்லை. பூமியே அழியும் போது கூகுளின் செர்வரும் சேர்ந்து தான் அழியும். ஆதலால் தகவல்களை பூமிக்கு வெளியே பாதுகாப்பது தான் பெஸ்ட். :-))) . நான் சொல்வது சரியா?

சில யோசனைகள் -

1. உங்களின் இந்த தளம் மொஸில்லா ஃபயர் பாக்ஸில் தாறுமாறாக தெரிகின்றது. அதை சரி செய்யவும். எழுத்துக்களை சரியாக படிக்க இயலவில்லை. இதை இவ்வளவு மெனக்கெட்டு எழுதுவற்கு காரணம் உங்களின் 'பிறர்க்கு நன்மை செய்ய தெரிந்திருந்தும் அதை செய்யாமல் இருந்தால் அதுவும் பாவம்.' என்ற வார்த்தை தான். :-)

2. இந்த தொல்லைக்கு காரணம் தற்போது உள்ள வார்ப்புரு (Template) தான் எனக்கருதுகின்றேன். அழகான வார்ப்புக்கள் இணையத்தில் இலவசமாக கொட்டிக்கிடக்கின்றது. இதோ ஒரு சுட்டி . http://freetemplates.blogspot.com/


3. வார்ப்புருவை மாற்றியபின் அனைத்து வகை உலாவிகளிலும் உங்களது தளத்தை சோதிக்க http://browsershots.org/ இதை நான் சகோதரர் பிகேபியிடம் www.pkp.in இருந்து கற்றுக்கொண்டேன்.

4. comment moderation இருக்கும் போது வேர்டு வெரிபிகேசன் தேவையில்லை. அதை எடுத்து விடவும். இது பின்னூட்டம் இடுபவர்களின் சிரமத்தை குறைக்கும்.

5. அனைத்திற்கும் பிறகு இந்த அனுபவத்தை வைத்து ஒரு பதிவு போட்டால் அது இன்னும் பலருக்கு போய் சேரும்.


with care & love,

Muhammad Ismail .H, PHD,

Selvaraj சொன்னது…

ரெம்ப நன்றி நண்பரே!
என் வலைப்பூ IE இல நன்றாகவே தெரிந்துகொண்டிருந்தது. இப்போது உங்களின் ஆலோசனைப்படி சில மாற்றங்கள் செய்துள்ளேன். !

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!