.

Loading...

Wednesday, 4 March 2009

என் வீடும் என் அப்பாவும்

என் வீடும் என் அப்பாவும்
நான் வெளிநாடு செல்ல பல காரணங்களில் வீடு கட்ட என்பதும் ஒன்று. என்னுடைய அப்பா மத்திய அரசில் பணிபுரிந்தும் கூட அவரால் சொந்தமாக ஒரு வீடு கட்டமுடியவில்லை. குடும்ப வீட்டிலேயே நாங்கள் எல்லோரும் பிறந்து வளர்ந்தோம். தன் நான்கு பிள்ளைகளையும் படிக்கவைத்தார். ஒரு நேர்மையான அரசு ஊழியரால் அவ்வளவுதான் செய்ய முடியும் நாங்கள் சகோதரங்கள் நான்கு பேருமே அரசு வேலையில் இருந்தோம். அதே என் அப்பாவிற்கு போதுமானதாக இருந்தது.

ஆனால் எனக்கோ திருமணத்தின் முன்பே தனியாக வீடு கட்ட வேண்டும் என்னுடைய அப்பா அம்மா அதில் தங்க வேண்டும் என்னும் எண்ணம் இருந்தது. அது இந்த அரசு வேலையில் இருந்தால் நடக்காது என தோன்றியதால் வெளிநாடு செல்ல வேண்டும் என்னும் முடிவிற்கு வந்தேன். என் முடிவிற்கு முதல் எதிர்ப்பு என் அப்பாவிடமிருந்தே வந்தது. அவர் எப்போதும் சொல்வார் கழுதை மேய்த்தாலும் அரசாங்கத்தில் மேய்க்கவேண்டும் என்று. ஆனால் நான் என் முடிவில் உறுதியாக இருந்து வெளிநாடும் வந்து விட்டேன்.
சில வருடங்கள் கழித்து விடுமுறையில் சென்று வீடு கட்டும் பணியை தொடங்கினேன். அஸ்திவாரம் மட்டுமே போட்டிருந்தேன். என் அப்பா காலை முதல் மாலை வரை அங்கே இருந்து பணிகளை கவனித்து கொண்டிருந்தார். இதனிடையில் என் விடுப்பு முடிந்து நான் வெளிநாடு செல்ல ஒரு நாள்தான் இருந்தது.

அடுத்த நாள் மதியம் நான் புறப்பட்டாகவேண்டும். அதற்காக இரவு பத்து மணியளவில் நான் கொண்டு செல்லவேண்டிய பொருட்களை எடுத்து வைத்துகொண்டிருந்தேன். திடீரென என் அம்மாவின் அலறலும் அழுகையும் கேட்டு ஓடினேன். என் அப்பா ஜனனியால் பாதிக்கப்பட்டிருந்தார். உடனே பக்கத்திலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றேன். இரவு முழுவதும் மருத்துவமனையிலேயே இருந்தேன். என் எண்ணங்கள் எங்கல்லாமோ போய்க்கொண்டிருந்தது. அப்பா என் புதிய வீட்டில் உறங்காமலே இறந்து விடுவாரோ என ஒரே வருத்தமாக இருந்தது.
அப்போது ஜெபிக்க தொடங்கினேன். தேவனே! என் தந்தை ஒரு நாளாவது என்வீட்டில் தங்கிய பின்னரே இறக்கவேண்டுமென. காலையில் மருத்துவரிடம் பேசியபோது உன் பயணத்தை ரத்து செய்யவேண்டாம் நீ அவரை வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என சொன்னார். வீட்டில் வந்ததும் அப்பாவும் பயணத்தை ரத்து செய்யவேண்டாம் எனசொல்லியதால் நானும் புறப்பட்டேன். அப்போது என் அப்பாவிடம் சொன்னேன். எனபுதிய வீட்டில் ஒருநாளாவது நீர் தங்கிய பின்னர்தான் இறப்பீர் என.
அப்பா சொன்னார் நான் இனி எவ்வளவு நாட்கள் இருப்பேனோ தெரியாதென. இது மீண்டும் கவலையடைய செய்தது. காரணம் வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு சில நேரங்களில் ஊரில் நடக்கும் நல்லது கெட்டதுகளில் கலந்துகொள்ள முடியாமல் போய்விடுவதுண்டு. எப்படியோ மிகுந்த சிரமங்களுக்கிடையில் என்வீட்டை கட்டி முடித்தேன்.நான் மருத்துவமனையில் வைத்து செய்த ஜெபத்தை என் தேவன் கேட்டார். ஒரு நாளைக்கு பதிலாக பத்து வருடங்களுக்கு மேலாக என் அப்பா என் புதிய வீட்டில் வசித்து வந்தார்.
இந்த காலகட்டத்தில் என் திருமணமும் முடிந்து மூன்று பிள்ளைகளும் பிறந்துவிட்டார்கள். நான் குடும்பத்தோடேயே வெளிநாட்டில் இருந்ததால் விடுமுறையில் செல்லும்போதுமட்டும் என்வீட்டில் தங்குவது. எனவே என் சொந்தவீடு எனக்கு விருந்து வீடு போலவே இருக்கும். ஒவ்வரு முறை போகும் போதும் யாராவது ஒருஆளாவது சொல்லுவார்கள் ஏண்டா உனக்கு இந்த வீட்டை வாடகைக்கு கொடுக்க கூடாதாவென. காரணம் என் ஊரில் வீடு வாடகைக்கு கிடைப்பது ரெம்ப கஷ்டம். நான் சொல்வேன், என் பெற்றோர் சாகும்வரை என்வீட்டில் இருக்கட்டுமென.
என் நிறுவனத்திலும் எனக்கு சகல வசதிகளுடம் கூடிய இரண்டுஅறை கொண்ட வீட்டை தந்திருந்தார்கள். அதுவும் என் பெற்றோருக்காக என்வீட்டை நான் கொடுத்ததால் என்தேவன் எனக்கு நல்ல வீட்டை தந்ததாகத்தான் இப்போதும் நினைக்கிறேன்.
இதனிடையில் பல முறை என் அப்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து வந்த்துள்ளார். கடைசியாக அவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருப்பதாக எனக்கு தொலைபேசியில் அழைத்து சொன்னார்கள். நான் உடனே பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்ய தொடங்கினேன். ஆனால் அடுத்தநாள் மீண்டும் தொலைபேசியில் அழைத்து சொன்னார்கள் இப்போது பரவாயில்லை எனவே நீ உடனே வரவேண்டாமென. ஆனால் என் உள்மனம் என்னை போகசொல்லியது. நான் அன்றே புறப்பட்டு அடுத்தநாள் காலை மருத்துவமனையை அடைந்துவிட்டேன்.
என் அப்பாவால் பேசமுடியவில்லை. ஆனால் ஒரு கையைவைத்து என்னை அணைத்துக்கொண்டார். அப்போது அங்கு வந்த மருத்துவர் என்னை தனியாக அழைத்து இனி பிழைக்கமாட்டார் எனசொல்லிவிட்டார். எனவே வீட்டிற்க்கே கொண்டுபோனோம். அன்று இரவே என் தந்தை நினைவை இழந்துவிட்டார். நானும் என் பெரியப்பா மகனும் பக்கத்திலேயே இருந்தோம். இரவு பத்து மணிக்கு மருத்துவராக இருக்கும் என் ஒரு அண்ணனின் மகன் வந்து பார்த்துவிட்டு சொன்னான், சித்தப்பா தாத்தா நாளைக்குள் இறந்துவிடுவார் என்று.
நான் என் அப்பாவின் பக்கத்திலேயே இருந்தேன். சரியாக இரவு 1.10 மணிக்கு அவரின் சுவாசத்தையே கவனித்துகொண்டிருந்தேன். உயிர் பிரியபோவதை உணர்ந்தேன். உடனே மூன்று சொட்டு தண்ணீர் என் அப்பாவின் வாயில் விடவும் அவர் உயிர் பிரிந்தது. ஊரில் இருந்த யாருமே என் அப்பாவின் உயிர் பிரியும்போது பக்கத்தில் இல்லை, ஆனால் பல ஆயிரம் மைல்கள் தாண்டி கடலுக்கப்பால் இருந்த எனக்குதான் அந்த பாக்கியம் கிடைத்தது.

0 comments :

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment

உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!