.

Loading...

Friday, 23 January 2009

தமிழகத்தில் தடம் பதித்த புனிதர்கள், St. Francis Xavier புனித சவேரியார்

புனித சவேரியார்புனித பிரான்சிஸ் சவேரியார் ஸ்பெயின் நாட்டில் ஏப்ரல் மாதம் ஏழாம் தியதி 1506 ஆம் வருடம் புகழ்மிக்க சவேரியார் அரண்மனையில் பிறந்தார். தன்னுடைய ஒன்பதாம் வயதில் தந்தையை இழந்த இவர் தாயின் பராமரிப்பிலேயே அதே அரண்மனையில் படித்து வந்தார். அப்போதே ஸ்பானிஷ் மற்றும் பஸஃஉ மொழிகளில் புலமை பெற்றிருந்தார்.

1525ஆம் வருடம் கல்லூரி படிப்பிற்காக பாரிஸ் சென்றார். அதன் பின்னர் பதின் ஒன்று வருடங்கள் பாரிசிலே இருந்த புனித சவேரியார், அங்குள்ள புனித பற்பே கல்லூரியில் தத்துவம் மற்றும் கலைத்துறையில் முதுகலை பட்டம் பெற்று, 1530 முதல் 1534 வரை பெஅஉவைஸ் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றினார். மீண்டும் 1534முதல் 1536 வரை இறையியலை பயின்றார். அப்போது புனித சவேரியாருக்கு பிஎர்ரே பாவர் மற்றும் இஞதயுஸ் லயோலா நண்பராயினர். பின்னர் இவர்கள் இயேசு சபை என்னும் இயக்கத்தை தொடங்கினர். இதில் மீண்டும் நான்கு நண்பர்கள் சேர்ந்து இறைபணியை செய்ய முடிவு செய்கின்னர்.

இதை தொடர்ந்து 1537 ஆம் வருடம் ஜூன் மாதம் 24 ஆம் நாள் குருவாக பட்டம் பெற்று தன் முதல் திருப்பலியை செப்டம்பர் 30ஆம் தியதி நிறைவேற்றுகிறார். பின்னர் நண்பர்கள் போப் மூன்றாம் சின்னப்பரை சந்தித்து இறைபணி செய்வதற்க்கான தங்கள் விருப்பத்தை தெரிவிக்கின்றனர். இந்த வேளையில் போர்த்துகீசிய மன்னன் அப்போது தங்கள் கீழ் இருந்த நாடுகளுக்கு குருக்களை தந்துதவும்படி வேண்டுகிறார். இதன்படி புனித சவேரியார் இந்தியா மற்றும் போர்த்துகீசிய காலணி நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

புனித சவேரியார் 1540இல் ரோமில் இருந்து புறப்பட்டு லிஸ்பான் செல்கிறார். அங்கு ஒரு வருடம் இறைபணியை செய்த பின்னர் இந்தியாவிற்கு வரும் வழியில் மொசாம்பிக்கில் ஒரு வருடம் இறைபணியை செய்துவிட்டு 1542 மே மாதம் 6ஆம் தியதி கோவாவை வந்தடைந்தார். முதல் நான்கு மாதங்கள் கோவாவிலும் பின்னர் தென் இந்தியாவின் குறிப்பாக தமிழக கடற்கரை கிராமங்களில் தனது இறைபணியை செய்துவந்தார்.

1543இல் கன்னியாகுமரி மாவட்டத்தில் தன் இறைபணியை தொடர்ந்தார். சுமார் பதினைந்து மாதங்கள் இங்கு கிராமங்கள் தோறும் மணியடித்தபடி சென்று அங்கு ஆட்கள் கூடியதும் அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவை பற்றிய செய்திகளை கூறியும் நோயாளிகளை சந்தித்தும் வந்துள்ளார். திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தில் பல ஆலயங்கள் புனித சவேரியாரால் நிறுவப்பட்டது.

இன்றைய குமரி மாவட்டத்தின் கோட்டாறு புனித சவேரியார் ஆலயம் இப்புனிதராலேயே நிறுவப்பட்டது. இந்த ஆலயம் கட்ட மன்னரிடம் இடம் கேட்டு மறுக்கவே, புனித சவேரியார் ஒரு ஆட்டின் தோல் அளவு இடம் கேட்கவே மன்னர் சம்மதிக்கிறார். பின்னர் இத்தோலானது விரிந்து கொண்டே சென்றதாம். இந்நிகழ்வின் மூலம் திருவிதாங்கூர் மன்னர் புனித சவேரியாரின் நண்பராகிறார். மேலும் கிறிஸ்தவர்களாக மதம் மாற இருந்த தடையும் நீக்கப்பட்டதாம்.

மேலும் மதுரை மன்னர் 1544இல் திருவிதாங்கூர் ராஜ்ஜியதோடு போர் தொடுக்க படைகளோடு நெருங்கிய போது திருவிதாங்கூர் ராஜா புனித சவேரியாரின் உதவியை நாடவே, புனித சவேரியார் படைகளின் முன்பாக தன் சிலுவையை காண்பித்தபடியே செல்ல மதுரை மன்னனின் படைகள் பின்வாங்கி விட்டனவாம். இன்னும் ஏராளமான புதுமைகள் இவரால் செய்யப்பட்டுள்ளன.

ஒரு முறை கிறிஸ்தவர்களாக மாறிய கிராமத்தை தாக்க வந்தவர்களை திருப்பி போகும்படியாக கேட்டும், போகாதபோது, பக்கத்தில் ஒருநாள் முன்புதான் கட்டி முடிக்கப்பட்ட கல்லறையை நோக்கி, கிறிஸ்துவே உம்முடைய வார்த்தையை இவர்கள் அங்கீகரிக்கும்படியாக இந்த கல்லறையானது திறக்கட்டும் என்கிறார். உடனே கல்லறையானது திறக்கிறது. பின்னர் இறந்தவரை எழும்பி வெளியே வரும்படி கூற அவரும் அவ்வாறே வெளியே வந்துள்ளார். இதை பார்த்ததும் அவ்விடத்தை சேர்ந்த நூற்றிற்கும் மேற்பட்டோர் கிறிஸ்தவர்களாக மாறுகின்றனர். மேலும் இதே இடத்தில் கால்கள் புண்களால் பாதிக்கப்பட்டிருந்த ஒரு பிச்சை காரரின் கால்களை குணமாக்குகிறார்.

கொம்புதுற என்னும் இடத்தில் கிணற்றில் விழுந்து இறந்த ஒரு சிறுவனின் மேல் கையை வைத்து செபிக்க அவன் உயிர் பிழைக்கிறான். ஜப்பானில் பார்வை இல்லாத ஒரு வியாபாரியின் தலை மீது சிலுவையை வைத்து செபிக்க அவர் மீண்டும் பார்வை பெறுகிறார். ஒரு முறை கடலில் பயணம் செய்யும் போது புனித சவேரியாரின் சிலுவை தொலைந்து போகிறது, ஆனால் கரையை அடைந்ததும் ஒரு நண்டு அந்த சிலுவையை கொண்டுவந்து சேர்த்திருக்கிறது.

புனித சவேரியார் சுமார் 38000 மைல்கள் கடல் மற்றும் தரை மார்கமாக பயணம் செய்து இறைபணியை செய்துள்ளார். கடைசியாக சன்சியன் தீவில் வைத்து நோயால் பாதிக்கபடுகிறார். இவரை ஜார்ஜ் அல்வறேஸ் என்னும் போர்த்துகீசியர் கவனித்து வந்தார். இருந்தாலும் 1552ஆம் வருடம் டிசம்பர் இரண்டாம் தியதி உயிர் துறக்கிறார். ஜார்ஜ் அல்வறேஸ் புனித சவேரியாரை அத்தீவிலேயே அடக்கம் செய்துவிட்டு சென்று விடுகிறார்.

மீண்டும் சுமார் இரண்டரை மாதங்கள் கழித்து ( பெப்ருவரி மாதம் 17ஆம் தியதி 1553ஆம் வருடம்) அத்தீவின் வழியாக வரும்போது அவருடைய கல்லறையை திறக்கின்றனர். அப்போது அவரது உடல் எந்த பாதிப்பும் இல்லாமல் வைக்கப்பட்டது போலவே இருந்தது. நறுமணமும் வீசியது. பின்னர் அவரது உடலை சண்ட க்ரூஸ் என்னும் கப்பலில் மலக்க கொண்டு செல்கின்றனர். இக்கப்பலானது மார்ச் மாதம் 22 ஆம் தியதி 1553ஆம் வருடம் மலக்கவை வந்தடைகிறது. மீண்டும் மாதாவின் ஆலயத்தில் வைத்து அவரது உடலை பார்த்த போது அது கெட்டுபோகாமல் நறுமணம் வீசியுள்ளது. பின்னர் சவேரியாரின் உடல் புனித சின்னப்பரின் தேவாலயத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்படுகிறது.

இரண்டு மாதங்களுக்கு பின்னர் தந்தை பெய்ரோ புனித சவேரியாரின் உடலை கோவா கொண்டுசெல்ல உத்தரவிடுகிறார். இதன்படி டிசம்பர் 1553இல் புனித சவேரியாரின் உடல் கோவா வந்தடைந்தது. 450 வருடங்களை தாண்டிய பின்னரும் இன்றும் இப்புனிதரின் உடல் மக்கள் பார்க்கும் படியாகவே வைக்கப்பட்டுள்ளது. அவருடைய உடலை தரிசித்த பல கோடி மக்களில் நானும் ஒருவன்

ஆங்கிலத்தில் தட்டச்சி செய்து தமிழில் மாற்றிட...

உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!