புனித தோமையார் |
உயிர்த்த இயேசு,
தன் சீடர்களை பார்த்து நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள். தந்தை மகன் தூய ஆவியின் பெயரால் ஞானஸ்தானம் கொடுங்கள் என்றார். அதன்படியே சீடர்கள் ஒன்றுகூடி உலகெங்கும் சென்று கிறிஸ்தவத்தை அறிவிக்க முடிவு செய்தனர். அதில் புனித தோமையார் இந்தியாவிற்கு தெரிவு செய்யப்பட்டார்.
அன்றைய கேரளக் கடற்கரைக்கும் மத்திய ஆசியாவுக்கும் இடையே நெருக்கமான உறவு இருந்தது. யவனர்களும் அராபியர்களும் தொடர்ந்து வணிக நோக்கத்துடன் கேரளத்துக்கு வந்தபடி இருந்தனர். இக்கடற்கரையில் இன்றும் குவியல் குவியலாக நாணயங்கள் கிடைத்தபடியுள்ளன. அதிகமும் ரோமாபுரி நாணயங்கள். அதற்கும் முன்பு கிமு 970 முதல் 930 வரை ஆண்ட இஸ்ரேலரின் சாலமோன் மன்னரின் மரக்கலங்கள் கேரளக் கடற்கரைக்கு வந்தபடி இருந்தன. அதற்கு புராதன பழைய ஏற்பாடு பைபிளிலேயே ஆதாரங்கள் உள்ளன. முசிரிஸ் என்று அப்போது குறிக்கப்பட்ட கொடுங்கல்லூரில் இருந்து முத்தும் மணிகளும் கொண்டுவரப்பட்டு மன்னருக்குப் படைக்கப்பட்டன. கேரளக்கடற்கரையிலிருந்து பெறப்பட்ட மிளகு முதலிய நறுமணப்பொருட்கள் அக்காலம் முதலே ஐரோப்பாவுக்கும் மத்திய ஆசிய நாடுகளுக்கும் மிகமிக பிரியமானவையாக இருந்தன.
ரோமாபுரி பயணியும் வரலாற்றாசிரியருமான ப்ளினி கிமு 23-79 ஒவ்வொரு வருடமும் பொன்னாகவும் மணியாகவும் பெருஞ்செல்வம் கேரளத்துக்குச் செல்வதைப்பற்றி வருந்தி எழுதியிருக்கிறார். மலபார் பகுதிக் கப்பல்கள் பாரசீக வளைகுடா கடந்து சென்று வணிகம் செய்வதைப்பற்றியும் அவர் எழுதியுள்ளார். ப்ளினியைப் போலவே டாலமி (கிமு 100-160) மற்றும் பெரிப்ளூஸ் ஆகியோரும் சேரக் கடற்கரைக்கு மேலைநாடுகளுடன் இருந்த நெருக்கமான உறவைப்பற்றி எழுதியுள்ளனர். முதல் நூற்றாண்டு முதலே கேரளத்தில் மட்டாஞ்சேரி என்ற இடத்தில் யூத குடியிருப்புகள் உருவாகிவிட்டன. சமீப காலம் வரை யூதர்கள் ஒரு தனிச்சமூகமாக அங்கிருந்தனர். அவர்களின் கோயிலும் சினகாக் அங்குள்ளது. இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் எழுதப்பட்டிருக்க வாய்ப்புள்ள யூதாஸ்- தாமஸ் குறிப்புகளின் படி முதல் நூற்றாண்டின் இறுதியில் புனித தோமையார் தன் சுவிசேஷங்களை கோண்டபறேஸ் என்ற பார்த்திய மன்னரின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் செய்து கொண்டிருந்தார் .
இலக்கிய ஆதாரங்கள் தவிர இன்றும் எஞ்சும் தோமையார் மரபு கிறித்தவர்களின் மார்த்தோமா கிறித்தவர்கள் சமூகம் அவரது வருகைக்கான சிறந்த ஆதாரமாகும். இவர்கள் பாலையூர் அர்த்தாடு நிலம்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து கேரளம் முழுக்க பரவினார்கள். மயிலாப்பூரில் உள்ள தோமையாரின் சமாதியும் பறங்கிமலை கோயிலும் இன்றும் உள்ளவை. இப்புனித அப்போஸ்தலரின் எலும்புகள் எடெஸ்ஸா என்ற ஊருக்குக் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
புனித தோமையார் இன்றைய கேரளத்தின் கொடுங்கல்லூரில் கடல் மார்கமாக கி.பி 52 இல் வந்திறங்கியதாக சரித்திரம் கூறுகிறது. புனித தோமையார் சுமார் பதினேழு வருடங்கள் இந்தியாவில் போதித்துள்ளார்.( நான்கு வருடங்கள் சிந்துவிலும் ஆறு வருடங்கள் மலபாரிலும் ஏழு வருடங்கள் மைலாபூரிலும்) இவர் மலபாரில் போதித்த போது அங்கு பிராமணர்கள் தண்ணீரை வான் நோக்கி தெளித்து பூஜை செய்வதை பார்த்தார். தானும் அவர்கள் அருகில் போய் தண்ணீரை வான் நோக்கி தெளித்து ஜெபித்தார். அப்போது அத்தண்ணீர் அந்தரத்தில் அப்படியே தொங்கிக்கொண்டே இருந்ததாம் இதை பார்த்த பிராமணர்கள் ஞானஸ்தானம் பெற்று கிறிஸ்தவர்களாக மாறிஇருக்கிறார்கள். இதுதான் புனித தோமையர் செய்த முதல் அற்புதம்.
இதை தொடர்ந்து பலரை கிறிஸ்தவர்கள் ஆக்கியதோடு ஏழரை ஆலயங்களையும் நிறுவினார். அவைகள் கொடுங்கல்லூர், கொல்லம், நிரணம், நிலாக்கள், கொக்கமங்க்லம், கொட்டக்கயல், பழையூர், திருவிதாங்கோடு அரப்பள்ளி.
கோண்டபறேஸ் ராஜாவும் புனித தோமையாரும்
புனித தோமையாரை பத்தி கேள்விபட்ட ராஜா அவரை சந்தித்து உமக்கு என்ன தொழில் தெரியும் என கேட்டார். தான் ஒரு தச்சன் எனவும் தன்னால் அரண்மனைகளை கட்ட முடியும் எனவும் கூறினார். இதை கேட்டு சந்தோஷ பட்ட ராஜா தனக்கு ஒரு அரண்மனை கட்டிதரும்படி கேட்கிறார். இதற்காக நிறைய பொன்னும் பொருளும் கொடுக்கிறார். ஆனால் புனித தோமையார் அந்த பணத்தை ஏழைகளுக்கு கொடுக்கிறார். சிறிது காலம் கழித்து ராஜா கேட்கும்போது அரண்மனை முடியும் தறுவாயில் உள்ளது என கூறுகிறார். ஆனால் ராஜாவிடம் பணிபுரிபவர் அவர் அரண்மனை எதுவும் கட்டவில்லை. மாறாக நாம் கேள்விப்படாத புதிய மதம் ஒன்றை போதித்து வருகிறார் என ராஜாவிடம் சொல்கின்றனர். இதைகேட்ட ராஜா மிகுந்த கோபம் கொண்டு அவரை அழைத்து எங்கே என் அரண்மனை என கேட்கிறார்? புனித தோமையாரோ வானை நோக்கி சொர்கத்திலே உமக்கு அரண்மனை கட்டியுள்ளேன், அதை நீர் இப்போது பார்க்க முடியாது. நீர் இறந்தால்தான் பார்க்கமுடியும் என் கூறுகிறார். இதைகேட்ட ராஜா மிகுந்த கோபம் கொண்டு அவரை சிறையில் அடைக்கிறான்.
அதன் அடுத்த நாளே ராஜாவின் சகோதரனான கட் மரணம் அடைகிறான். பின்னர் இறந்த அவன் ராஜாவின் கனவில் தோன்றி சகோதரா, நீர் என்மேல் மிகுந்த அன்பு வைத்துள்ளீர் என தெரியும். நான் எதை கேட்டாலும் நீர் தருவீர் எனவும் தெரியும். நீர் சொர்க்கத்தில் கட்டிவைத்திருக்கும் அரண்மனையை எனக்கு விலைக்கு தரவேண்டும் என்கிறான். குழம்பிப்போன ராஜா இல்லாத ஒன்றை கேட்டால் எப்படிதருவேன் என்கிறான். அப்போது ராஜாவின் சகோதரன் இறந்த தன்னை வானதூதர்கள் சொர்க்கத்திற்கு அழைத்து சென்றதாகவும் அங்கு பல அழகிய அரண்மனைகளை காண்பித்ததாயும் அதில் மிகவும் அழகுடைய அரண்மனையை நான் கேட்டபோது அது கோண்டபருஸ் ராஜாவிற்கு சொந்தமானது, உமக்கு தரமுடியாது என்றனர். நானோ அதை விலைக்கு வாங்கவேண்டும் என்றேன். அதனால் தான் என்னை இங்கே திரும்ப அனுப்பினார்கள் என்றான். அப்போது தான் புனித தோமையாரை ராஜா விடுதலை செய்து ஞானஸ்தானம் பெற்று கிறிஸ்தவராக மாறுகிறார்.
மைலாப்பூரில் புனித தோமையார்!
மலபார் கடற்கரையிலிருந்து மயிலைப்புரம் என்று அழைக்கப்பட்ட இன்றைய மயிலாப்பூரான பழைய சென்னை கடற்கரை பகுதிக்கு வந்து சேர்ந்தார். அப்போது அப்பகுதியை ஆண்டு வந்த இராஜா மகாதேவன், தோமையாரை வரவேற்றான் மன்னனின் ஆதரவுடன் அப்பகுதியிலுள்ள மக்களுக்கு தனது போதனைகளை தொடங்கினார். புனிதரின் போதனையையும் புதுமையையும் கண்டு மக்கள் அவர் பின்னால் போவதையும் கிறிஸ்துவ மதத்திற்கு மாறுவதையும் கண்டு இராஜா மகாதேவனும் அவனது ஆட்களும் புனிதத் தோமையாரை தீர்த்துக் கட்ட முடிவெடுத்தனர். மன்னனும் அவனது ஆட்களும் வேவு பார்ப்பதை கண்ட புனித தோமையார் சைதாப்பேட்டைக்கு அருகிலுள்ள சின்ன மலைக் குகையில் மறைவாகத் தங்கிக் கொண்டு மக்கள் மத்தியில் வேதம் போதிக்க மட்டும் வெளியில் வந்தார். புனித தோமையார் சின்னமலை குகையில்தான் இருக்கிறார் எனத் தெரிந்த மன்னரின் ஆட்கள் மலைக்குள் நுழைய மன்னரின் ஆட்களில் ஒருவன் ஈட்டியால் புனித தோமாவின் முதுகில் குத்த அவர் உயிர் துறந்தார்.கி.பி. 72ல் வேதசாட்சியாக மரணமடைந்த புனிதத் தோமையாரின் திருவுடல் மயிலாப்பூர் கடற்கரையில் அவரே கட்டிய ஆலயத்தில் புதைக்கப்பட்டது. புனித தோமையார் புதைக்கப்பட்ட இடத்தில் வானுயர எழுந்த பேராலயம் தான் புனித சாந்தோம் பேராலயம்.
தோமையார் கொல்லப்பட்ட நாளில் 18-ம் நூற்றாண்டு வரை கிறிஸ்துவர்கள் அந்தப் பாறைக்குச் சென்று பிரார்த்தனை நடத்தி வந்தனர். தோமையாரைக் கொல்லப் பயன்படுத்திய ஈட்டியின் முனை அவரது ரத்தம் தோய்ந்த மண் ஆகியன மயிலைக்குக் கொண்டுவரப்பட்டு அவரது உடலுடன் அடக்கம் செய்யப்பட்டன. இந்தியாவின் அப்போஸ்தலர் என அழைக்கப்படும் தோமையாரை கௌரவிக்கும் படியாக இந்தியா இரண்டுமுறை அவருடைய தபால் தலைகளை வெளியிட்டுள்ளது (1964 மட்டும் 1973