.

Loading...

Tuesday, 11 January 2011

மனிதம் இன்னும் வாழ்கிறது!

மனிதம் வாழ்கிறது!

ஒருமுறை விடுமுறையில் சென்றிருந்தபோது நாகர்கோவிலிலுள்ள ஒரு பிரபல உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்ட்டிருக்கும்போது, கல்லாவில் இருந்த வயதான பெண்மணி என்னையே நோக்கிக் கொண்டிருந்தார். என்னடா, என்னையே பார்க்கிற மாதிரி இருக்கு! உள்ளூர்லேயே என்னை ஒருத்தனுக்கும் சரியா தெரியாது. இந்த கொள்ளைல இவங்களுக்கா என்ன தெரியப்போகுது. சொன்னா நம்ப மாட்டீங்க! ஒரு விடுமுறையின் போது, என் சொந்த கிராமத்தில் வாடகை சைக்கிள் எடுக்க போனேன். ஆளு தெரியாது, வெளியூர் காரங்களுக்கு சைக்கிள் தரமுடியாது என சொல்லிட்டான். அப்புறம் தெரிஞ்ச ஆளு சொன்னப்புறம்தான் தந்தான். காரணம் நான் வெளிநாட்டிற்கு வந்து இருபது வருடங்களை தாண்டி விட்டதுதான். எதோ விடுமுறையில் செல்லும்போது சிலவாரங்கள் மட்டுமே இருப்பதால் சொந்த இடம் விருந்து இடம் போலவே இருக்கும். இதில் இந்த பெண்ணிற்கு என்னை தெரிய வாய்ப்பே இல்லையென நினைத்து கொண்டேன். ஒரு வழியாக சாப்பிட்டபின் பணம் கொடுக்க சென்றபோது, என்னிடம் கேட்டார் உங்க பேர் செல்வராஜ்தானா? எனக்கு ஒரே அதிர்ச்சி, சுதாகரித்துக்கொண்டு, ஆமா, உங்களுக்கு என்னை எப்படி தெரியும்?(எனக்கு சுத்தமாக அவர்களை அடையாளம் தெரியவில்லை) உன்னை எப்படியப்பா மறப்பேன். இருபது வருடமானாலும் அப்படியேதானப்பா இருக்கிறா!

இனி இருபது வருடங்களுக்கு முந்தைய நிகழ்வு:

அப்போது இருபத்தைந்து வயதுகூட ஆகவில்லை. நாகர்கோவிலில் அரசு பணியில் இருந்த நேரம். அலுவலகத்திலே நான்தான் வயதில் சிறியவன். அம்மா காலைலே கட்டுசோறு(கட்டு சோறின் சுவையே தனிதான். அது இப்போ யாருக்கு தெரியுது)கட்டி தந்து விடுவாள். அதனால் உணவகங்களில் சென்று உணவருந்த வேண்டிய அவசியம் இருக்காது. இருந்தாலும் நண்பர்களில் பெரும்பாலானோர் உணவகங்களிலேயே சாப்பிடும் பழக்கமுடையவர்களாக இருந்தார்கள். கடைசியா நானும் அப்பப்ப அவங்ககூட போய், உணவகத்தில் சாப்பிட ஆரம்பித்து விட்டேன். முதல் நாள் நண்பர்களுடன் சென்றபோது உணவகம் புறம்போக்கு நிலத்திலுள்ள ஒரு ஓலைக்குடிசையில் இருந்தது. பார்த்ததும் நான் இங்க வரல்ல என சொல்லிட்டேன். நண்பர்கள் அடிக்காத குறைதான். அதன் பின்னர் பேசாமல் உள்ளே போய்விட்டேன். அங்குள்ள சுவையான உணவு எனக்கும் பிடித்து போய் விட்டது. இதன் பின்னர் தொடர்ந்து செல்லா விட்டாலும் சில வேளைகளில் அங்கு உணவு அருந்துவதை பழக்கமாக கொண்டிருந்தேன்.

அவர்களுக்கு இந்த ஒலைக்குடிசையிலிருந்து கட்டிடத்திற்கு மாற வேண்டுமென்பது ஒரு லட்சியமாக இருந்தது. எனக்கு வெளி நாட்டிற்கு போக வேண்டுமென்பது லட்சியமாக இருந்தது. இதற்கிடையில் ஒரு புதிய கட்டிடத்தில் உணவகம் நடத்த ஒரு வாய்ப்பு அவர்களுக்கு வந்தது. ஆனால் அவர்களிடம் பணம் கிடையாது. அவர்களின் வாடிக்கையாளர்களிடம் இதை சொல்லிக்கொள்வார்கள். யாருமே கண்டுகொள்ள மாட்டார்கள். சிலர் உதவலாம் என சொன்னார்கள். என் நண்பர்கள் உட்பட. ஆனால் யாரும் உதவியதாகத்தான் தெரியவில்லை. நான் வாயே திறக்கவில்லை. காரணம் என்னால் உதவ முடியாது என்பதுதான் உண்மை. அதே நேரம் எனக்கு வெளிநாட்டிற்கு செல்ல வாய்ப்பும் கிடைத்தது. எனவே நான் அதற்கான ஏற்பாட்டிலேயே மும்முரமாக இருந்தேன்.

அடுத்தநாள் நான் பாம்பே செல்ல வேண்டியிருந்தது. அதே நேரத்தில் அவர்களுக்கு எதாவது உதவி செய்ய வேண்டுமென்ற எண்ணமும் இருந்தது. வீட்டில் ஒரு நண்பனிடம் சொல்ல மறந்துவிட்டேன், போய் சொல்லிக்கொண்டு வருகிறேன் என சொல்லிவிட்டு அந்த உணவகத்திற்கு சென்று, நான் ஒரு சிறுதொகையை "இதை உங்களின் லட்சியத்திற்கு வைத்துகொள்ளுங்கள்" என கொடுத்தேன். நாளை காலையில் பாம்பே செல்வதாக கூறினேன். நல்லா இருப்பா என சொல்லி அனுப்பினார்கள். இதன் பின்னர் பலமுறை விடுமுறையில் வந்தாலும் எனக்கு இது நினைவிலே வருவது கிடையாது. சுருங்க சொன்னால் இதை நான் மறந்தே விட்டேன். ஆனால் இருபது வருடங்கள் கடந்த பின்னரும் அவர் என்னை மறக்கவில்லை.

இதல்லவா மனித நேயம்! மனதிற்குள் நினைத்துக்கொண்டேன். மனிதம் இன்னும் வாழ்கிறது!

4 comments :

Mohammed Rafi TMH said...

இதேபோல் இன்னும் பலர் இருக்கின்றனர் ... அவர்களின் வேண்டுதல்கள் நமது வெற்றிகள் ..

Selvaraj said...

Mohammed Rafi TMH said...
இதேபோல் இன்னும் பலர் இருக்கின்றனர் ... அவர்களின் வேண்டுதல்கள் நமது வெற்றிகள் .

//வருகைக்கு நன்றி! நிச்சயமாக நம் வெற்றிக்கு பிறரின் வேண்டுதலும் ஒரு காரணம்//

Florence Varghese said...

பெரியோரின் ஆசிர்வாதம் தான் நமது வெற்றியின் இரகசியம்..

Maria Selvaraj said...

Florence Varghese said...
பெரியோரின் ஆசிர்வாதம் தான் நமது வெற்றியின் இரகசியம்..

//கருத்திற்கு நன்றி சகோதரி, மிகவும் சரியாக சொன்னீர்கள்!//

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment

உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!