.

Loading...

Wednesday, 28 July 2010

வேர்களை தேடி அறுத்தல்!

வேர்களை தேடி அறுத்தல்!

அன்றுதான் அவனுக்கு விடுமுறை. மலேசியாவிலிருந்து இந்தியாவிற்கு கால்பந்து விளையாட அந்நாட்டின் சார்பாக வர்தவர்களில் ஒருவன். சக விளையாட்டு வீரர்களைப்போலல்லாமல் தனக்கு தமிழகத்தில் வேர்கள் உள்ளதை அறிந்த்தவன். இன்று எப்படியாவது என் வேர்களை தேடிப்பிடித்தே ஆவது என்னும் நோக்கத்தோடு கிளம்ப்பினான். விலாசத்தை மறக்காமல் எடுத்துக்கொண்டு வாடகை கார் மூலம் ராமநாதபுரத்தை அடைந்தான். தான் மலேசியாவில் பிரபல கால்பந்து வீரனாக இருந்தாலும், இந்தியாவில் யாரும் அடையாளம் கண்டு கொள்ளவில்லை. கிரிக்கெட் வீரர்களை விட்டால் வேறு யாரைத்தான் தெரியும் நமக்கு? இது அவனுக்கு வசதியாகவே போய்விட்டது. ரசிகர்களின் தொல்லையில்லா பயணம்.

ராமாநாதபுரத்தை அடைந்த்தவனை ஒரு கூட்டமே நின்று பார்க்க தொடங்கியது. காரணம் அவன் தேடிய வேர்களின் விலாசம் குடிசை வாசிகளின் இடமாகப்பட்டது. ஓ, கடவுளே! நான் தேடுபவர் நிச்சயமாக குடிசை வாசியாக இருக்கக்கூடாதென மனதிற்குள் வேண்டிக்கொண்டான். தான் தேடிய பெண்மணி, அதோ! அந்த குடிசையில் வசிக்கிறார் என ஒருவர் காண்பித்தார். மனதை திடப் படுத்திக்கொண்டு உள்ளே நுழைந்தான்.

உள்ளே ஒரு வயதான பெண்மணி. அம்மா!... நான் மலேசியாவிலிருந்து, என்றவனை உற்று நோக்கினாள்...
அந்த தாயின் நினைவுகள் இப்போது....

இருபத்தைந்து வருடங்கள் பின்னோக்கி சென்றது.

மரகதம், நம்ம என்னைக்கும் இப்படி இருந்தா போதுமா என்ன? நமக்கு ஒரு பிள்ளையும் பிறந்திடுச்சி, அவனை இங்கிலீஷ் மீடியத்தில படிக்க வைக்கணும். நம்ம போல இல்லாம அவன நல்லா படிக்க வைக்கவேண்டியது நம்ம கடமை. அதுக்கு இந்த கூலி வேலையில் கிடைக்கிற பணம் போதாது.

அதுக்கு நான் என்ன செய்யணும் சொல்லுங்க?
இல்ல, இந்த... வெளி நாட்டிற்கு போனா நிறைய சம்பாதிக்கலாம். நல்ல வீடு கட்டலாம். நாமளும் நல்ல வசதியாயிடலாம்.
சரிதாங்க! அதுக்கு நான் என்ன செய்யணும்.
உன்னோட நகைகளை தந்தா... அத.. வித்து நான் வெளிநாட்டிற்கு போய்...
இதுக்கு கேட்கணுமா என்ன? அவ்வளவு நகைகளையும் கணவனிடம் கொடுத்துவிட்டாள். தன் மகனும் இதை பார்த்துக்கொண்டுதான் இருந்தான்.
ஆசைபட்டதை மாதிரி கணவனும் மலேசியா சென்றான். முதல் சில மாதங்கள் ஒழுங்காக பணம் அனுப்பினான். அப்புறம் எதோ பணம் வருவதும், கடிதம் வருவதும் நின்று போனது. பணம் இல்லாததால் மரகதம் கூலி வேலைக்கு செல்ல தொடங்கினாள். மகனை காப்பாத்த, தானும் உயிர் வாழ இதை தவிர வேறு வழியில்லை என்றாகி விட்டது.
இதற்கிடையில் கிராமத்திலோ உனக்கென்ன! நீ இனி மாடி வீடு, அது இது என சொல்ல தொடங்கிய நேரமாக இருந்தது. அதற்குள் கணவன் தடம் மாறி விட்டான்.
நிறைய மாதங்கள் கழித்து மலேசியாவிலிருந்து வந்த ஒருவர், உங்கள் கணவர் கொடுத்து விட்டதென, சில துணிகளை கொண்டு வந்து கொடுத்தார். பேச்சிவாக்கிலே கணவனுக்கு, ஒரு மலேசியா தமிழ் பெண்ணுடன் தொடர்பு உள்ளதென சொல்லி விட்டு சென்றார்.
இது நடந்து சில மாதங்களுக்கு பின்னர் கணவனிடமிருந்து தன்னை மறந்து விடும்படியாகவும். தான், இங்குள்ள ஒரு மலேசிய பெண்ணை திருமணம் செய்து விட்டதாகவும் கடிதம் வந்தது.

மரகதம் ஆடிப்போனாள். இதற்காகவா இவனை வெளிநாட்டிற்கு அனுப்பினேன்! நானே என் தலையில் மண் அள்ளிப் போட்டுவிட்டேன், என அழுது புலம்பினாள்.
தமிழ் திரைப்படத்தில் என்றால், கணவனிடம் சவால் விட்டு, பிள்ளையை நல்லா படிக்க வைத்து, கணவனை காலில் விழ வைக்கலாம். நிஜ வாழ்கையில் இது நடக்குமா என்ன?
மகனும் பள்ளிக்கு போனான். எவ்வளவோ முயற்சி செய்தும் படிப்பு, அவனுக்க மண்டையில் ஏறவே இல்லை. கணவனும் இல்லையென்றாகி விட்டது, பிள்ளையும் படிப்பில் சரியில்லை. போதாக்குறைக்கு கடன் வேறு. வேறு வழியில்லாமல் இருந்த வீட்டையும் விற்று குடிசைக்கு மாறி விட்டாள். இதற்குள் வருடங்கள் ஓடி விட்டன! மகனும் கூலி வேலைக்கு செல்ல தொடங்கினான்.
இருந்தாலும் கூலி வேலையில் கிடைத்த பணத்தை வைத்து பெரிதாக என்ன சாதிக்க முடியும். எனவே நிரந்தர குடிசை வாசியாகவே மாறிவிட்டனர். இதன் பின்னர் கணவனிடமிருந்து எந்த பதிலுமில்லை.

இப்போது நிமிர்ந்து பார்த்த மரகதம் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு, தன் கணவன் எப்படி இருந்தானோ அதே உருவத்தில் இவனை பார்க்கிறாள். அவளுக்கு உடனே புரிந்தது. தன் கணவனின் மலேசிய வாரிசு என்று.
உக்காரப்பா என சொல்ல அங்கு நாற்காலிகள் இல்லை. இதற்கிடையில் மகன் வந்து விட்டான். மலேசியா தம்பி என்றதும் பக்கத்து வீட்டில் நாற்காலி வாங்க ஓடினான். பள்ளிக்கூடம் படத்திலே தங்கர் பச்சான் ஓடுவதை போல.நாற்காலி வந்ததும் அமர்ந்தான். இதற்குள் மொத்த கிராமமுமே கூடிவிட்டது.
அம்மா!... நாங்கள் மலேசியாவில் மிகவும் வசதியாக வாழ்வதாகவும். தந்தை இறந்து சில வருடங்கள் ஆகி விட்டதெனவும் சொன்னான். கூடவே தன் தாய், செய்தது பெரிய தவறெனவும், அதற்காக தங்களை மன்னிக்கும் படியாகவும் கேட்டுக்கொண்டான். மொத்த கிராமத்தார் முன்னிலையிலும், நான் மலேசியா போனதும் உங்களுக்கு பணம் அனுப்பி தருவேன். நீங்கள் பெரிய மாடி வீடு கட்டனும். இந்த அண்ணனுக்கும் விசாவிற்கு ஏற்பாடு செய்வேன் என நிறைய வாக்குறிதிகள். மரகதம் கணவனின் மொத்த தவறுகளையும் மறந்து விட்டாள். எதோ, தன் கணவனின் இன்னொரு குடும்பம் வசதியாக வாழ்கிறது என்பதே ஒரு சந்தோசமாக இருந்தது.
கண்ணீரோடு அவன் விடை பெற்றான். மொத்த கிராமமே அவனை வழியனுப்பி வைத்தது. சில நாட்கள் சென்றன . கிராமத்திலும் எல்லோரும் மரகதம் உனக்கு நல்ல நேரம் பிறந்திடுச்சி. இன்னும் கொஞ்ச நாளில் பணம் வரும். அப்புறமென்ன, நீ பெரிய ஆளுதான்.
மாதங்கள் உருண்டோடியது. பணமும் இல்லை, தகவலும் இல்லை. யாருமே அவனிடம் விலாசமும் கேட்கவில்லை. மீண்டும் மாடி வீடு ஆசை மண்ணாய் போனது. அவனது வாக்குறிதி தேர்தல் வாக்குறிதி போல ஆகிவிடுமென அந்த தாய்க்கு தெரியாமல் போனது. தன் கணவனை வஞ்சித்தவள் இனி பணம் கொடுக்க விடுவாளா என்ன? இது அந்த மரகதத்திற்கு தெரியாதா என்ன? இப்போது வருடங்களே தாண்டி விட்டது. போனவன் போனதுதான்.
மரகதம் அதே குடிசையில் கூலி வேலை செய்யும் மகனோடு.

இது ஒரு விதத்தில் "வேர்களை தேடி அறுத்தல்" போன்றதே!

0 comments :

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment

உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!