இருவரும் ஆசிரியரே!
நான் உயர் நிலைப்பள்ளி மாணவனாக இருந்தபோது, அன்றைய விஞ்ஞான பாடத்தை எடுத்துக்கொண்டிருந்த ஆசிரியர் "குவி லென்ஸ் குழி லென்ஸ்" பற்றி விளக்கி கொண்டிருந்தார். அதற்காக விஞ்ஞான ஆய்வுக்கூடத்திலிருந்து இந்த லென்ஸ் ஐ எடுத்துக்கொண்டு வந்திருந்தார். விஞ்ஞான ஆய்வுக்கூடமானது மற்றொரு ஆசிரியரின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்த லென்ஸ் ஐ விளக்கி கொண்டிருக்கும்போதே ஆசிரியரின் கையிலிருந்து ஒரு லென்ஸ் தவறி விழுந்து உடைந்து விட்டது. அப்பெட்டியில் நிறைய லென்ஸ் இருந்தது. உடனே ஆசிரியர் இதை நீங்கள் யாரிடமும் சொல்லக்கூடாதென கண்டிப்பாக சொல்லிவிட்டார். மட்டுமல்ல, உடைந்ததை எடுத்து விட்டு பெட்டியை திரும்ப அதற்கு பொறுப்பான ஆசிரியருக்கு தெரியாமலே ஆய்வுக்கூடத்தில் வைத்துவிட்டார். நாங்களும் பரமரகசியமாகவே வைத்திருந்தோம்.
அப்போது எனக்கு அது தவறு என்று தெரியவில்லை. ஆனால் பள்ளி வாழ்க்கை முடிந்தபின்னர், எனக்கு அந்த ஆசிரியர் செய்தது தவறு என்று தோன்றியது. இது நடந்து நிறைய வருடங்கள் ஆனாலும் எப்போது நான் இந்த ஆசிரியரை பார்த்தாலும் எனக்கு இந்த ஞாபகம்தான் வரும். இப்போதும் அவர் உள்ளூர் பள்ளியிலேயே பணிபுரிந்து கொண்டிருப்பதால் ஒவ்வரு விடுமுறையில் செல்லும்போதும் அவரை பார்ப்பேன். மிகவும் அன்பாக பழகக்கூடிய ஆசிரியர். சுற்றுலா சென்றபோதுகூட மற்ற ஆசிரியர்போல அல்லாமல் எங்களின் கூட இருந்து கூத்தடித்தவர். என்ன இருந்தாலும் உண்மையை மறைத்தவர் என்ற அந்த நிகழ்வுதான் எப்போதும் ஞாபகம் வரும். போதா குறைக்கு என் திருமண ஒளிநாடாவிலும் அவர் இருப்பதால் அதை பார்க்கும் போதும் அவர் செய்தது தவறு என்ற நினைப்புதான் வரும். ஆக அவர் எவ்வளவுதான் படித்து தந்திருந்தாலும் இந்த அவரது செயல் "ஒரு வெள்ளை காகிதத்தில் கறுப்பு புள்ளி பளிச்சென தெரிவதைபோல இருந்தது".
ஆசிரியர் இரண்டு:
இதுவும் சிறுவனாக இருந்தபோது நடந்த நிகழ்வு.
வீட்டின் பக்கத்திலேயே சாராயக்கடை இருந்தது. ஆனால் வீட்டில் யாருக்கும் அப்போது குடிப்பழக்கம் கிடையாது. கடை பக்கமே யாரும் போவதும் கிடையாது. ஒருமுறை வீட்டில் சில்லறை மாற்றி வர பணம் தந்து விட்டார்கள். அருகிலுள்ள எல்லாக்கடையிலும் கேட்டுப் பார்த்தேன், கிடைக்கவில்லை. சாராயக்கடை மட்டும்தான் பாக்கி. போகவா? வேண்டாமா? என ஒரே குழப்பம். கடைசியாக போனேன். சில்லறையை தந்து விட்டு அங்கிருந்தவர் சொன்னார். இனி, இங்க எல்லாம் வரக்கூடாது என்னப்பா! சரி, என்று சொல்லிவிட்டு வந்தேன். அவருக்கு என் குடும்பம பற்றி தெரிந்திருந்தது. பின்னர் அடிக்கடி அவரை பார்ப்பேன். காரணம் என் வீட்டை கடந்து தான் தினமும் போவார். அதன் பின்னர் அவர் ஆசிரியர் வேலை கிடைத்து போய் விட்டார். அப்போதுதான் தெரிந்தது அவர் ஆசிரியருக்கு படித்தவர், வேலை கிடைக்காததனால் அந்த சாராயக்கடையில் வேலை பார்த்திருக்கிறாரென்று.
அன்று அவர் சொன்னது, இன்றுவரை என் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. அன்றுதான் நான் ஒரு சாராயக்கடையினுள் நுழைந்தது. அதன் பின்னர் இன்றுவரை சாராயக்கடையினுள் நுழைந்தது கிடையாது. அவர் பெயர் மரிய அற்புதம், குமரி மாவட்டத்திலுள்ள அம்மாண்டிவிளையின் பக்கத்து கிராமம் என கேள்வி பட்டிருக்கிறேன். அவர் எனக்கு பள்ளியில் படித்து தரவில்லை எனினும் நல்லதை படித்து தந்த ஒரு நல்லாசிரியர். அவர் சாராயக்கடையில் இருந்தபோதும் அவரது செயல் "கறுப்பு காகிதத்தில் வெள்ளை புள்ளி பளிச்சென தெரிவதைப்போல இருந்தது".
2 கருத்துகள் :
நல்ல அனுபவம்.
இரு துருவத்தையும் சொல்லியிருக்கீங்க.
வடுவூர் குமார் said...
நல்ல அனுபவம்.
இரு துருவத்தையும் சொல்லியிருக்கீங்க.
//நன்றி குமார்! இந்த நிகழ்வு என்னால் மறக்க முடியாத ஒன்று//
கருத்துரையிடுக